ஏமனில் கடந்த 2 தினங்களில் நடந்த வான்வழித் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது. இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.
இது தொடர்பாக ஐ.நா. கூறுகையில், ''வான்வழித் தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏமனில் நடைபெறும் மோதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏமனின் ஹஜ்ஜா நகரம் மிகவும் பாதிக்கப்பட்ட நகராக உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைக்காமல் உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.