தென்கொரியாவின் 5 முக்கிய நகரங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அதை தேசிய பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேற்று மாலை தென்கொரியாவின் வடகிழக்கு எல்லை நகரமான கோசேஆங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பின்பு அப்பகுதியில் வீசி வரும் அதி வேகமாக காற்றில் தீ மளமளவென மலைப்பகுதியான கேங்வான் பகுதியிலுள்ள சோக்ச்சோ, தோங்கே, இண்சி மற்றும் கேங்நியாங் ஆகிய நகரங்களுக்கும் பரவியது. ஏறக்குறைய 250 ஹெக்டேர் நிலங்கள் தீயில் சிக்கியுள்ளன. சுமார் 4000 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இருந்து சுமார் 872 தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர செயல்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்த தீ விபத்தை தேசிய பேரிடராக இன்று அறிவித்துள்ளது.