tamilnadu

img

நானாத்தான் பேசினேன்... ரொம்ப சந்தோஷமாயிருக்கு!

மதுரை, ஜன.29-  மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் பள்ளிச்சிறுமி ஒருவர் கோரிக்கை முன்வைத்தார். இதனையறிந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மீனாட்சி புரம் கிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் மாயாண்டிபட்டியில் அமைந்துள்ள உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அரசுப்பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்து,சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.   மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிரா மத்தில் பாண்டீஸ்வரி தலைமையில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கிராம சபை  கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினர். அப்போது மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில்  5 ஆம் வகுப்பு படிக்கின்ற பெரியண்ணன்- சித்ராதேவி தம்பதியின் இளைய மக ளான  சஹானா என்பவர் கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி தலைவரை பார்த்து, இந்த கிராமத்தில் இருந்து மாயாண்டிபட்டியில் உள்ள உயர் நிலைப் பள்ளிக்கு  மாணவ,மாணவிகள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்ல முறையாக அரசு பேருந்து வசதி செய்து  கொடுங்க என்று கோரிக்கை முன்வைத்தார். 

மாணவியை வாழ்த்திய எம்.பி.,

இதனையறிந்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில், குடியரசு தினத் தன்று நான் தில்லியில் இருந்தபோது மாணவி பேசியதை ஊடகங்களில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல, மாணவிகள், சிறு வர் சிறுமியர்களும் தங்கள் கோரிக்கை களை முன்வைக்க வேண்டும்.  இதுகுறித்து, உடனே நான் அதிகாரி களிடம் பேசினேன். பள்ளிச் செல்லும் நேரத்திற்கு ஏற்றாற்போல பேருந்து இயக்கப்படும் என்று உறுதி யளித்துள்ளனர். இதுபோல அனைவரும் கிராம சபையில பேச வேண்டும். மாணவி சஹானாவை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.  இந்தத் தகவலைத் தெரிவிப்ப தற்காக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மீனாட்சி புரத்துக்கு ஜனவரி 29 புதனன்று வந்தார். கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பாகப் பேசிய மாணவி சஹானாவை பாராட்டி, பரிசு ஒன்றை அளித்தார்.   பின்னர் அந்த மாணவியிடம் பேசினார். மாணவி சஹானா  ஆனந்தக் கண்ணீர் விட்டு ரொம்ப நன்றி என கண் கலங்கினார். இதனை கண்ட ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர், மாணவ மாணவிகளும் சஹானாவை பார்த்து அந்த நிமிடம் கலங்கினர்.  பின்னர் சு.வெங்கடேசன் பேசுகையில்,

இந்த மாணவி மட்டுமல்ல, உடனுள்ள  மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள், மக்கள் என அனை வரும் கிராம சபை கூட்டத்தின் முக்கியத் துவத்தை  புரிந்து கொண்டு பிரதான கோரிக்கைகளை தீர்மானமாக வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தரக் கோரி கோரிக்கை மனு ஒன்றை  அளித்துள்ளனர். இதனை கட்டித்தர  நடவடிக்கை எடுப்பேன் .கிராமப்புற கல்வியை முன்னேற்ற எல்லோரும் பணி யாற்ற வேண்டும் .இந்த பள்ளியினை முன்னுதாரணமாக மாற்றுவோம் என்று தெரிவித்தார். மீனாட்சிபுரத்தில் உள்ள ஓட்டுக்  கட்டிடத்தில் இயங்கும்  தொடக்கப் பள்ளியினை சென்று பார்வையிட்டார். விரைவில் இதனை கான்கிரீட் கட்டிட மாக மாற்றுவோம் என்று உறுதி யளித்தார்.   சு.வெங்கடேசன் எம்.பி.யுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.கண்ணன், கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப் பினர் மு.பாலுச்சாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகர், ஏ.கஜேந் திரன், கே.சேகர் மற்றும் கிளைத் தோழர்கள்  ஆகியோர் உடன் சென்றனர்.

ரொம்ப சந்தோசமாயிருக்கு... 

மாணவி சஹானா கூறுகையில், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்க அக்கா உட்பட நிறைய அக்காக்கள் மாயாண்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி யில் படிக்கப் போறாங்க. ஊருக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை டவுன் பஸ் வருது. ஆனால் பள்ளிக்குப் போற நேரத்துக்கு பஸ் வராது. அதனால எங்க ஊர் அக்காக்களெல்லாம் 7 கிலோமீட்டர் நடந்து போவாங்க. வரும்போதும் நடந்து வருவாங்க. வர்ற வழியில சாராய கடை இருக்கு. பள்ளிக்குப் போனவங்க திரும்பி வர்ற  வரைக்கும் என் அம்மா அப்பா எல்லா ரும் பயந்துகிட்டே இருப்பாங்க. அப்பத் தான் எங்க ஊருல கிராம சபைக் கூட்டத்துல பேசலாம்னு நினைச்சேன்.  நானாத்தான் பேசினேன். இப்ப எல்லோரும் பாராட்டுறாங்க.ரொம்ப சந்தோசமாயிருக்கு என்று கூறினார்.

 

;