tamilnadu

img

தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணி.... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

தேனி:
தேனி அருகே தப்புக்குண்டில் ரூ. 265 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் ரூ.265.00 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதற்கட்டமாக ரூ.94.72 கோடி நிதியை தமிழக அரசுஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் 253.64 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில், நிர்வாகக் கட்டடம், நவீன வகுப்பறை களுடன் கூடிய எட்டு கல்வித்தொகுதி கட்டடங்கள், மாணவ மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு, விடுதிக் காப்பாளருக்கான குடியிருப்பு மற்றும் விருந்தினர்  இல்லம் ஆகியவை கட்டப்பட உள்ளது.இந்தக் கல்லூரியில் நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய பால் மற்றும் இறைச்சிகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்ப நிலையங்கள் உட்பட 15 துறைகள், கால்நடை உற்பத்தி தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க கால்நடை பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சி ஆகியவற்றை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சை மருத்துவமனை வளாகமும் அமைய உள்ளது.

கட்டுமானப் பணிகள் துவக்கவிழா
தப்புக்குண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  முன்னிலையில், புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தமிழ்நாடு கால்நடைமருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர்  சி.பாலசந்திரன், கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் அ.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மாணவ, மாணவிகளின் நலன் கருதியும்,  கால்நடை, கோழியின மேம்பாட்டில் ஆர்வமுள்ள விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள் திறனை மேம்படுத்தவும் அடிப்படையாக அமைந்துள்ள இப்புதிய அரசு கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளை  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

காவல் நிலைய கட்டடம் திறப்பு
ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மக்களின் குறைகளைநிவர்த்தி செய்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையின் பகுதியிலேயே க.விலக்கு புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூ. 6 லட்சம் மதிப்பில்தனியார் பங்களிப்புடன்   மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் புறக் காவல்நிலையம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை மதுரை மண்டல காவல்துறைத் தலைவர்  முருகன் திறந்து வைத்தார். நிகழ்வில்  திண்டுக்கல் காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாய்சரண் தேஜஸ்வி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

;