tamilnadu

img

அணைக்கட்ட கோரி ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர், நவ.14-  திருவள்ளூர் மாவட்டம், கொல்லாலகுப்பம் கிராமத்தின் வறட்சியை போக்க கெவிகுண்டு மலை மற்றும் சாரபாறை மலை அடி வாரத்தில் அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழனன்று (நவ.14)  கோரிக்கை மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கொல்லாலகுப்பம் ஊராட்சியில் சின்னமுடிப்பள்ளி, சி.என்.கண்டிகை, டி.டி.கண்டிகை, புண்ணியம் ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மா விளைச்சல் பிரதான தொழி லாகும். நெல், கரும்பு ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படு கிறது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டு களாக மழை பொய்த்துப் போனதால் 600 ஏக்கரில் விளைச்சல் செய்த மா மரங்கள் காய்ந்துள்ளது. மேலும் 400 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், 350க்கும் மேற்பட்ட கரும்புகளும் காய்ந்து கருகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ள னர். கொல்லாலகுப்பம் கிராமத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு குப்பிரெட்டி குளம் அமைக்கப்பட்டது. இது சில ஆண்டுகளிலேயே உடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2003 ஆண்டு அணை கட்ட பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கொல்லாலகுப்பம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கரில் கெவிகுண்டு மலை, சாரபாறை மலை, மூனு குப்பை மலை, வல்வால் பாறை மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளன. இங்கு  மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீணகாக கலக்கிறது.  இதனால் கொல்லால குப்பம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் வறண்டு விடுகிறது.  மலைகளிலிருந்து வரும் மழைநீரை சேமிக்க நான்கு மலைகளின் அடிவாரத்தில் சுமார் 160 அடி அகலத்திற்கு அணை கட்டி விவசாயத்தையும், குடிநீர் பஞ்சத்தையும் போக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் கிராமத்தை விட்டே எல்லோரும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி
கொல்லாலகுப்பம் கிராமத்தில் 1985 ஆம் ஆண்டு அரசு பள்ளிக்கூடம் அருகில் கட்டப்பட்ட குடிநீர் மேல்தேக்க தொட்டி கடந்த 10 ஆண்டு களாக பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இது குறித்து மனு கொடுத்த பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கொல்லால குப்பம் கிராமத்தின் வறட்சியை போக்க கெவிகுண்டு மலை மற்றும் சாரபாறை மலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும், பழுதடை ந்துள்ள குடிநீர் தொட்டியை இடித்து புதிய குடிநீர்தொட்டி கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள், மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜெயச்சந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.அந்தோணி, விவசாயிகள் தேவன், நாகராஜன், தண்டபாணி, அண்ணாமலை, சாம்பசிவம், முனுசாமி மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.