tamilnadu

நாகர்கோவில் முக்கிய செய்திகள்

28 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை: 45 நிமிடங்களில் முன்னணி நிலவரம்

மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், மே 17-கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள்45 நிமிடங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியது: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்,தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தனித்தனியாக தனித்தனி அறைகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மஞ்சள்நிற கோடு போடப்பட்டிருக்கும். அதைத்தாண்டி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள1694 வாக்குச்சாவடிகளில் ஒரு தொகுதிக்கு310 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.குளச்சல் மற்றும் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிகள் வாக்கு எண்ணிக்கைக்கு தலா 12 மேஜைகளும், கிள்ளியூர், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு தலா 10 மேஜைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்பின்னர் வி.வி.பேடில்பதிவான வாக்குகள் எண்ணி சரிபார்க்கப்படும். அதன்பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்றும் சுமார் 45 நிமிடங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வாறு நிறைவுபெற்றவுடன் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். மேலும் இந்த வாக்குப்பதிவு நிலவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதுடன், கரும்பலகையிலும் எழுதப்படும். அதே போல் சுவிதா ஆப் மூலமும் முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.அனைத்து சுற்றுகள் நிறைவடைந்த பின்னர் விளவங்கோடு தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகள், கிள்ளியூரில் உள்ள ஒருவாக்குச்சாவடியில், வி.வி. பேடில் பதிவானவாக்குகள் எண்ணப்படும். மேலும், ஒருசட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடி வீதம், என மொத்தம் 30 வி.வி.பேடில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் வரும் 22ஆம் தேதி குமரி வருகிறார். அவர் வாக்குஎண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த பின்னர்தான் செல்வார் என தெரிவித்தார்.முன்னதாக, வாக்கு எண்ணிக்கை பணியை சரியான முறையில் மேற்கொள்ள போதுமான ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அடையாள அட்டை பெறவுள்ள நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மா.சுகன்யா, (தேர்தல்) சிவகுமார், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடரும் வழிப்பறி, கொள்ளை: குமரியில் பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில், மே 17-கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி அருகே செம்பொன் கரையை சேர்ந்தவர் காசிதங்கம் (65). இவர் வியாழனன்று இரவு தனதுவீட்டில் உள்ள கால்நடைக்கு உணவு வைக்கவந்தார். அப்போது வீட்டின் பின் பக்கம் மறைந்திருந்த மர்மநபர் மூதாட்டியை தாக்கி, அவர் அணிந்திருந்த ஐந்தரை சவரன் நகையைபறித்து தப்பி ஓடினார். புகாரின் பேரில் ஈத்தாமொழி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் பகுதியில் திருமூலநகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் காஸ்ட்ரோ என்பவரது மனைவி கில்டா ராணி (41).கில்டா ராணி நெல்லை மாவட்டம் மாறான்கோணம் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்குசென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில்வந்த இளைஞர்கள் கில்டா ராணியின் கழுத்தில்கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தொடரும் வழிப்பறிகொள்ளை யால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.