திண்டுக்கல்:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திங்களன்று காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்கு திண்டுக்கல்லில் உள்ள அஞ்சலி ஹோட்டல் ரவுண்டானா அருகில் ஒன்று சேரத் தொடங்கினர். யாரும் கூடக்கூடாது என்று காவல்துறையினர் விவசாயிகளிடம் தகராறு செய்தனர். விவசாயிகள், காத்திருப்புப் போராட்டம் நடத்த இடம் வழங்கி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி னர். காவல்துறையினர் பரிசீலிப்பதாக கூறியதையடுத்து விவசாயிகள் அங்குள்ள மருத்துவமனை அருகே கூடினர். பின்னர் திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டோர் விவசாயிகள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் அருகே பேரணியை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
பின்னர் காத்திருக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்யப்போவதாகக் கூறினர். தொடர்ந்து கட்டுமானத்தொழிலாளர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணி, எட்வர்டு ஆகியோரை தனியாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இளைஞர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். பெண் காவலர்கள் பெண்களை “தரதரவென” இழுத்துச் சென்றனர்.காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங் களை எழுப்பினர். ஆத்திரமடைந்த காவல்துறையினர் அனைவரையும் வெறித்தனமாக இழுத்துச்சென்று கைது செய்ய முயன்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கே.பாலபாரதி, கைதானவர்களை ஏற்றிய வாகனத்தின் முன்னால் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சித்
தனர். அந்த முயற்சியை சில தோழர்கள் தடுக்க முயன்றனர். அவர்களையும் தரத்தரவென்று இழுத்துச்சென்று கைது செய்தனர். காவல்துறையினர் ரவுடிகளைக் கூட இப்படி கைது செய்து அழைத்துச் சென்றதில்லை. அந்த அளவிற்கு அராஜகமாக நடந்து கொண்டனர். மனித உரிமைகளை மீறிய காவல்துறையின் நடவடிக்கையால் ஏ.குழந்தைதெரசு, ஜே.கே.சரவணன், கே.பிரபாகரன், எல்.தங்கவேல் உள்ளிட்ட ஐந்து பேர் காய மடைந்தனர். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன் பிரச்சாரத்திற்காக வைத்திருந்த ஹேண்ட் மைக்கை காவல்துறையினர் உடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கே.லட்சுமணப்பெருமாள், நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் என்.பெருமாள், பி.செல்வராஜ், தங்கவேல், மாநில முன்னாள் துணைத்தலைவர்கள் என்.பாண்டி, பி.செல்வராஜ். மத்திய குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பாலுபாரதி, சின்னச்சாமி, ஏ.ரெங்கசாமி, பி.தர்மராஜ், காங்கிரஸ் விவசாய அணி மாநிலச் செயலாளர் வி.வசந்தி, மதிமுக விவசாய அணி மாவட்டத் துணைச் செயலாளர் டி.தேவராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் எம். ஜானகி,பொருளாளர் கவிதா சச்சிதானந்தம், ராஜேஷ்வரி, பாப்பாத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.அருள்செல்வன், பி.வசந்தாமணி, கண்ணன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பால்ராஜ்,தனசாமி, அழகர்சாமி, இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தீத்தான். பாலசுப்ரமணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆர்.விஷ்ணுவர்த்தன் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளிருப்புப் போராட்டம்
அமைதியான முறையில் நடைபெறும் காத்திருக்கும் போராட்டத்திற்கு அனுமதிகேட்டும் தராமல் அராஜகமாக கைது செய்து காவல்துறையினர் அமைதியை சீர்குலைத்துள்ளனர். இதன் காரணமாகஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவரைக் கொண்டு காவல்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். எனவேகாவல்துறை வழங்கும் உணவை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்து விவசாயிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஎம் கண்டனம்
திண்டுக்கல் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி அனைவரையும் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, காங்கிரஸ் கட்சியின் விவசாயி அணி மாநிலப் பிரிவு செயலாளர் வசந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் சூசைமேரி, மாதர் சங்கத் தலைவர்களையும் பெண்கள் என்றும் பாராமல் தீவிரவாதிகளைப் போல வலுக்கட்டாயமாக அராஜகமாக இழுத்துச்சென்று கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.