இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இரண்டு கலைஞர்கள் ரிஷிகபூர் (67), இர்ஃபான் கான்(53). சமீபத்தில் சில நாட்கள் இடைவெளி யில் அவர்கள் இருவரும் காலமான செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண காலமாக இருந்தால், இவர்களுடைய மறைவுக்குப் பெருங் கூட்டம் கூடியிருக்கும். கொரோனா ஊரடங்கால், விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே கலந்துகொண்டு அவர்களின் இறுதி நிகழ்ச்சி நடந்தேறியது. ஆனாலும் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இர்ஃபான், ரிஷிகபூர் ஆகியோர் பங்களிப்பை குறிப்பிடத் தவறவில்லை.
சினிமா ஒரு தொழிலாக (Industry) மாறிய பிறகு, கோலிவுட்டும் பாலிவுட்டும் கார்ப்பரேட் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டன. வணிக ரீதியில்தான் படங்கள் தயாரிக்க முடியும். சமூகப் பார்வை இருக்காது. தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், திரைக்கலைஞர்களும் தனிப்பட்ட முறையிலும், அடக்கி வாசிப்பார்கள். சமூகப் பிரச்சனைகளில் முற்போக்கான கருத்துகளை வெளியிடமாட்டார்கள். வலுவான சமூகப் பார்வையுள்ள படங்களில் நடித்து, அந்தப் படம் ஓடவில்லை என்றால், திரையுலக சந்தையில் தனது இடம் சரிந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பார்கள். இதுதான் இன்றைய சினிமாவின் நிலையாக இருக்கிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், இர்ஃபான், ரிஷிகபூர் இருவரும் வித்தியாசமாக வாழ்ந்து காட்டியவர்கள்.
ரிஷிகபூர்
இவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாக, இந்தித் திரையுலகம் 1940களில் எப்படி இருந்தது என்பது பற்றி, சில விவரங்களைச் சொல்ல வேண்டும். பால்ராஜ் சஹானி, அவருடைய சகோதரர் பீஷம் சஹானி, தமயந்தி உள்ளிட்டவர்கள் செயல்பட்ட ‘இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷன்’ எனப்படும் ‘இப்டா,’ இந்தித் திரையுலகிலும் சமூகத்திலும் பெரிய தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. பால்ராஜ் சஹானி பஞ்சாப்பில் 1913ல் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட உணர்வு வீறு கொண்டு எழுந்த காலம். தன்னுடைய பதின்பருவ வயதில் கல்கத்தாவில் உள்ள தாகூரின் சாந்திநிகேதன் நிலையத்திற்குச் சென்று புதிய சிந்தனையைத் தேடினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கிருந்து வார்தா காந்தி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அண்ணல் காந்தியைச் சந்திக்க வந்த பிபிசி நிருபருடன் லண்டனுக்குச் சென்று பிபிசியில் சிறிது காலம் பணியாற்றினார். காதல் திருமணம் செய்துகொண்ட பால்ராஜ் சஹானியும், தமயந்தியும் பம்பாய்க்கு கம்யூனிஸ்டுகளாகத் திரும்பி வந்தார்கள்.
பம்பாயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷியுடன் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷனில் இணைகிறார்கள். வங்கப் பஞ்சத்துக்கு நிதி திரட்ட நாடகம் நடத்துகிறார்கள். 1946 ஆம் ஆண்டில் பம்பாயில் இந்தியக் கப்பற்படை வீரர்களிடையே ஏகாதிபத்தி யத்துக்கு எதிராக எழுச்சி ஏற்பட்டு நாடு முழுவதும் பரவியது. பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையை ஏவி ஒடுக்கியது. தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் கப்பற்படை வீரர்களுக்கு ஆதர வாகப் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது இப்டாவில் இருந்த பால்ராஜ் சஹானி, பீஷம் சஹானி, தமயந்தி மூன்று பேரும் தெருத் தெருவாகச் சென்று விழிப்புணர்வு வீதி நாடகங்களை நடத்தி தொழிலாளர்களையும், மக்களையும் கப்பற்படை வீரர்களின் எழுச்சிப் போராட்டத்தின் பால் ஈர்த்தார்கள்.
இப்டா வங்கப்பஞ்சத்தை மையமாகக் கொண்டு, தர்த்தி கே லால் (மண்ணின் மைந்தர்கள்) என்ற பெயரில், கே.ஏ.அப்பாஸ் இயக்கத்தில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. இப்டாவினுடைய பாரம்பரியம் பற்றியும், அத்தகைய அமைப்பை புனரமைப்பதன் அவசியம் பற்றியும் தனி கட்டுரையே எழுதும் அளவிற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அமர காவியமும், அனல் காற்றும்...
இதே காலகட்டத்தில் 1946 ஆம் ஆண்டில், சாந்தராம் இயக்கி நடித்த கோட்னிஸின் அமர காவியம் என்ற படமும் வெளியாகிறது. கோட்னிஸ், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி வந்த சீனச் செம்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மராட்டியத்தில் இருந்து சீனாவுக்குச் சென்று, அங்கேயே உயிர் துறந்த மருத்துவர். தொடர்ச்சியாக சில முற்போக்கான திரைப்படங்கள் வெளிவந்தன. பால்ராஜ் சஹானி நடித்த கரம் ஹவா (அனல் காற்று) 1973 ஆம் ஆண்டு வெளியானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை; காந்திஜி படுகொலை பின்னணியில், மதமோதல், மதச்சார்பின்மை அம்சங்களை உள்ளடக்கிய படம் இது. சென்சார் போர்டு இப்படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் பத்து மாதங்களாக மறுத்துவிட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலையிட்ட பிறகுதான் படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. படம் வெளியான பிறகு, தேச ஒற்றுமைக்கான படம் என்று இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
முல்க் என்றொரு திரைப்படம்...
கரம் ஹவா வெளியான அதே ஆண்டில் ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த பாபி வெளியானது. பாபி வியாபாரத்துக்கானது, கரம் ஹவா விவாதத்துக்கானது. 1973ல் சென்னை யில், நான் உள்ளிட்ட மாணவர்கள் இந்த இரண்டு படங்களையுமே பார்த்திருக்கிறோம். 45 ஆண்டு களுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டில் ரிஷிகபூர் தனது 65 ஆவது வயதில் நடித்த முல்க் என்ற இந்தித் திரைப்படம் வெளியானது. ‘முல்க்’ என்பதற்கு தேசம் என்று பொருள். இப்படத்தில் ரிஷிகபூர் ஓர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். அவருடைய மருமகள் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரும் ஒரு வழக்கறிஞர். ரிஷிகபூரின் சகோதரரின் மகன் தீவிரவாத ஜிஹாத் அமைப்பில் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டுப் பலர் கொல்லப்படுகிறார்கள். அவர் மீது மட்டுமல்லாமல், ரிஷிகபூரின் சகோதரர் உள்ளிட்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் வழக்குத் தொடுக்கப்படுகிறது. அண்டை வீட்டுக்காரர்கள் இவர்களது குடும்பத்தையே விரோதியாகப் பார்த்து, அவர்களுடைய வீட்டைத் தாக்கும் அளவுக்குக் கோபம் கொள்கிறார்கள். சகோதரர் சிறையிலேயே இறந்துவிடுவார். வழக்கில் இருந்து தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆஜராகிறார் ரிஷிகபூர்.
அவருடைய வாதம், சமூகத்தில் ஒருவர் தவறு செய்தால், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தை வெறுப்பது தவறானது; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மதத்தை வெறுப்பதோ, அந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரையும் எதிர்ப்பதோ சரியானது அல்ல என்பதாக இருக்கும். ஒரு கட்டத்தில் ரிஷிகபூரையும் வழக்கில் சேர்த்துவிடுகிறார்கள். அந்தக் கட்டத்தில்தான் அவருடைய மருமகள் தன்னுடைய குடும்பத்துக்காக வாதிடுகிறார். மறுபுறத்தில் பிராசிகியூட்டர் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய வெறுப்பு மனநிலையில் வாதாடுகிறார். இறுதியில் ரிஷிகபூர் குடும்பம் ஜெயித்து விடும். படம் முழுக்க ரிஷிகபூர் குடும்பத்தினர் அவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும், ‘தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் இந்துக்கள் தான்’ என்ற மனநிலையில் துளியும் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு மிக நுட்பமாக மதச்சார்பின்மையைப் பதிவு செய்திருக்கும் படமாக முல்க் இருந்தது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்கக்கூடிய, வெறுப்பரசியலை வலு வாக எதிர்க்கக்கூடிய படமாக வெளிவந்து, இந்தித் திரைத்துறையில் மக்களால் வரவேற்கப்பட்ட படங்களில் பால்ராஜ் சஹானியின் கரம் ஹவா போலவே ரிஷிகபூரின் முல்க்குக்கு நிச்சயம் இடமுண்டு.
இர்பான் கான்
இர்பான் கானைப் பொறுத்தவரை இந்தித் திரையுலகில் மட்டுமல்லாமல், ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்த இர்ஃபான், தனது 53 ஆவது வயதில் உடல்நலம் பாதித்து கடந்த ஏப்ரல் 24 அன்று மரணமடைந்தார். திரை உலகில் தன்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது கருத்தை வெளியிட்டு வந்தவர் இர்ஃபான். அரசியலில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் மதச்சார்பின்மைக்காக குரல்கொடுத்தவர். 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் காந்திநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.கே. அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தவர். சேவை மனப்பான்மை கொண்டவர். கிராம சேவா சங்கத்துக்கு தொடர்ந்து உதவி செய்து வந்தவர். அதனுடைய மாநாட்டை 2018 ஆம் ஆண்டு துவக்கி வைத்து உரையாற்றி இருக்கிறார். எப்போதும் கிராமப்புற ஏழைகள் பற்றியும், கைவினைஞர்களைப் பற்றியும் பேசுவார். அவர்களுக்காக குரல் கொடுப்பார்.
லெனினாக நடித்த கலைஞன்
பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் எழுதிய சாதி ஒழிப்புப் பற்றிய பாடலை ஜெய்ப்பூரில் 2014 ஆம் ஆண்டில் நடந்த இலக்கிய விழாவில் இர்ஃபான் பாடிக் காட்டினார். தெலுங்கானா ஆயுதப் புரட்சியை ஆதரித்துப் பாடிய, உருதுக் கவிஞர் மக்தும் முகைதீன் பாடலை அவ்வப்போது மேற்கோள் காட்டுவார். சோஷலிசக் கருத்துகளை ஆதரித்துப் பேசியவர். தேசிய நாடகவியல் பள்ளியில் நாடகக் கலை கற்று, நாடகத்தில் இருந்து தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் துவங்கியவர் என்பதால், தேர்ந்த கலை, இலக்கியப் படைப்புகளை ஏராளமாக கற்றிருக்கிறார் இர்ஃபான். ரஷ்ய நாடகவியலாளர் மிக்கைல் ஷாட்ராவ் இயற்றிய சிவப்புப் புல்லில் நீலக் குதிரைகள் (Blue horses on red grass) எனும் புகழ்பெற்ற ரஷ்ய நாடகம் இந்தியில் அரங்கேற்றப்பட்டது. தூர்தர்ஷனில் 1992 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகமாகவும் வெளிவந்தது. இதில் லெனினாக நடித்து நீங்கா புகழ்பெற்றார் இர்ஃபான்.
இவர் ஒரு முறை, ஜே.என்.யூ பல்கலைக் கழகத்துக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியது 5 நிமிடம் மட்டுமே. ஆனால், அவருடைய உரையின் மீது 120 நிமிடங்கள் மாண வர்கள் கலந்துகொண்ட விவாதம் நடைபெற்றது. அந்த 5 நிமிடப் பேச்சில் அவர் சொன்ன முக்கியமான கருத்து, ‘சாதாரண மனிதனே வரலாற்று நாயகன்’ என்பது. இப்படி இந்தித் திரை யுலகில் பால்ராஜ் சஹானி, இர்ஃபான், ரிஷிகபூர் உள்ளிட்ட பல கலைஞர்கள் சமூகப் பார்வையுள்ள படைப்புகளில் நடித்திருக்கிறார்கள். சமூகப் பார்வை யுள்ள கருத்துகளை வெளியிட்டுள் ளார்கள்.
இந்தித் திரைப்பட உலகில், துவக்க காலத்தில் இருந்தே வியாபாரத்துக் கான படங்கள் ஒரு புறத்தில் வந்தா லும், மறுபுறம் விவாதத்துக்கான சமூகப் படங்களும் வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமாகப் பங்கேற்ற வர்கள் பால்ராஜ் சஹானி, இர்ஃபான், ரிஷிகபூர் போன்றவர்கள். கொரோனா காலத்தில் இர்ஃபானும், ரிஷிகபூரும் இறந்த காரணத்தினால், இவர்களது இறுதி நிகழ்ச்சியோ, அதற்குப் பிறகு இவர்களது பங்களிப்பு குறித்த நினைவூகூறல் நிகழ்ச்சியோ நடக்கவில்லை. இர்ஃபான், ரிஷிகபூர் போலவே, திரையுலகில் நடிகர்கள் சமூகப் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களில் பங்கேற்பதன் வாயிலாகவோ, சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் படங்களில் பணியாற்றுவதன் வாயி லாகவோ சமூகத்தின் அங்கத்தினராகத் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
படைப்பாளிகளின் சமூகப் பங்கு கூர்மையடையட்டும்
கொரோனாவுக்குப் பிறகு, உலக அளவில் மட்டுமல்லாது, இந்தியா விலும் புதிய சூழல் ஏற்பட்டு, பல்வேறு தளங்கள் குறித்த விவாதங் களும், வாதப் பிரதிவாதங்களும் நடைபெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் இந்த நாடுகள் கடை பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான். இந்தக் கொள்கையால் பொதுச் சுகாதாரம் பாழடிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முன்னுக்கு வரக்கூடிய வாய்ப் பிருக்கிறது. எதிர்காலத்தில் இந்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டுப் பல பிரச்சனைகள் பேசப்படும். கொரோனாவுக்குப் பிறகு கலை இலக்கியத் தளங்களில் இவை பற்றியெல்லாம் பல்வேறு விவாதங்கள் எழக்கூடிய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாகப் பண்பாட்டுத் தளத்தில் கொரோனாவுக்குப் பிறகு, சமூகப் பார்வையுள்ள படைப்பு களை உருவாக்குவதில் எழுத்தாளர்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எழுத்தாளர்கள், திரைப்பட, நாட கக் கலைஞர்கள் இத்தகைய தளங்களில் பணியாற்றக் கூடிய படைப் பாளிகள், மிகப் பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு மிகப் பெரும் அவ சியம் ஏற்பட்டுள்ளது. இர்பான், ரிஷிகபூர் ஆகிய மாபெரும் கலைஞர்களின் நினைவு அதற்கு உரமூட்டட்டும்.