tamilnadu

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரையே தேர்தலில் போட்டியிடச் செய்யும் கொடிய செயல்

புதுதில்லி, ஏப்.20-பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட ஒருவரையே, மத்தியப் பிரதேசம், போபால்மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடச் செய்திட மேற்கொண்டுள்ள கொடியசெயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல்தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:‘‘மக்களவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், போபால் தொகுதியிலிருந்து பாஜகசார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக பிரக்யா சிங் தாகூரையே பாஜகவும்,பிரதமரும் தேர்ந்தெடுத்திருக்கும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியதாகும். வலதுசாரிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான பல வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்போதும் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் அவர்மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இருப்பினும், பாஜக இவரை வேட்பாளராகக் களம் இறக்கியிருப்பது என்பது, இவர்கள் ‘‘தாங்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்’’ என்று அடிக்கடி வீராவேசமாகப் பேசிவருவதென்பது எல்லாம் வெறும் வெத்துவேட்டுதான் என்பதை மெய்ப்பித்திருக்கிறது. பிரக்யா சிங் தாகூரும் மிகவும் கேவலமான முறையில் அவர் மீது வழக்கு தொடுத்த பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக இருந்த, 2011 செப்டம்பர் 24 அன்று மும்பையில் ஐஎஸ்ஐ திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட ஹேமந்த் கர்க்காரேக்கு எதிராக இழிவாகப்பேசியிருப்பதிலிருந்து தன் அருவருக்கத்தக்க குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


நியாயப்படுத்தும் பிரதமர்


இவ்வாறு பயங்கரவாதிகளுக்கு எதிரான புலன்விசாரணைகளை நடத்தி வந்த தியாகி ஒருவர் மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்திருப்பது, நாட்டின் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கண்டன விமர்சனங்களைப் பெற்றிருப்பது நியாயமேயாகும். எனினும், பிரதமர் பிரக்யா சிங் தாகூரை ஆயிரக்கணக்கான ஆண்டு கால மதம், தத்துவம் மற்றும் நாகரிக விழுமியங்களின் அடையாளமாகச் சித்தரித்து மிகவும் நாணமற்ற முறையில் நியாயப்படுத்தி இருக்கிறார். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஒருவரை, அரசியல் மயப்படுத்திடுவதில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கிடும் ஒருவரே மிகவும் நாணமற்ற முறையில் இவ்வாறு ஈடுபட்டிருப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். மக்கள் தங்கள் வாழ்வாதார நெருக்கடிக்குள் சிக்கி மன அமைதியின்மையுடன் வாழ்வது அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பாஜகவும் பிரதமரும் விரக்தியின் எல்லைக்கே சென்று வாக்காளர்களையே மதவெறித் தீக்குள் தள்ளுவதற்குமுயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தேர்தல் சூழலை மாசுபடுத்தக்கூடிய விதத்திலும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும், அரசமைப்புச் சட்டம் - ஒழுங்கையும் அரித்து வீழ்த்திடும் விதத்திலும் பாஜகவினர் மேற்கொண்டிருக்கிற முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய இவர்களின் கொடிய முயற்சிகளை தேர்தலில் இவர்களை நிராகரிப்பதன் மூலமாகத் தோற்கடித்திட வேண்டும்என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)


;