அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து, அண்ணா பல்கலைக்கழகமும் விசாரணை நடத்தி வந்தது. இதில் கடந்த 2017,2018-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக தற்காலிக பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.