சென்னை,
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் 3000ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று தொல்லியல் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது. மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை கோரிக்கை விடுத்துள்ளது. நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.