தஞ்சாவூர் ஏப்.21-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காடு ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி விழா கடந்த ஏப்.10 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆம் நாள் விழா, மண்டகப்படிதாரர்களான நகர வர்த்தக கழகத்தால் நடத்தப்பட்டது. ஏப்.18 அன்று பால் குடம், காவடி எடுப்புடன், மாலை தேர்த் திருவிழா நடந்தது. ஏப்.20 திருக்கல்யாணம் நடைபெற்றது. ஞாயிறு அதிகாலை 3 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணியர்(உற்சவ மூர்த்தி) தீர்த்தக் குளத்தில் மும்முறை வலம் வந்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர். பின்னர் விடையாற்றி உற்சவம், மண்டாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பெ.சிதம்பரம் மற்றும் கோவில் பணியாளர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் செய்திருந்தனர்.