டென்னிஸ் உலகில் சானியா மிர்சாவுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றியவர் அங்கீதா. இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து அசத்தி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்று டென்னிஸ் விளையாட்டையும் பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்கச் செய்தாலும் மற்றவீரர்களைப் போன்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க வேண்டும் அந்தக் கனவு இவருக்கும் உண்டு. அந்த வட்டத்துக்குள்ளும் சென்று விளையாடி இருப்பது அவருக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெருமையாகும். இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்தார். இந்தி யாவைக் காட்டிலும் மிக வித்தியாசமான களிமண் மைதானத்தில் ஆடுவதும், பந்தை எதிர் கொள்வதும் அதுவே அவருக்கு முதல் முறையாகும். இந்த பயணம் அங்கீதாவுக்கு ஏராளமான நுணுக்கங்களையும் பாடத்தையும் கற்றுத் தந்தது.
பிரஞ்சு ஓபன் டென்னிசில் விளையாடியதால் கிடைத்த வலிமையும் நம்பிக்கையும் ஆஸ்திரேலியா, விம்பிள்டன் தொடர்களில் இரண்டாவது சுற்று வரை முன்னேற முடிந்ததும், அத்துடன் உலகின் முன்னணி வீரர்கள் விளையாடுவதையும் நேரில் பார்க்க முடிந்தது. அவரை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தது. 26 வயதாகும் அங்கீதா ரெய்னா, காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் நகர் அருகே பிங்லிஷ் கிராமமாகும். பின்னர் அங்கிருந்து ஜம்முவுக்கு மாறியது அவரது குடும்பம். அங்குதான் அங்கீதா ரெய்னா பிறந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்ததால் குஜராத் மாநிலத்திற்காக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் புனே வணிக கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்த சங்கீதாவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான (ஓஎன்ஜிசி) தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவரது காஷ்மீர் தோற்றமும் பழக்க வழக்கமும் தொடர்கிறது. ஐந்து வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் பிடித்த அங்கீதா, 20 ஆண்டுகளில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடம் பிடித்து அலங்கரித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் முதன் முறையாக மும்பையில் நடந்த ஆட்டத்தில் தொழில்முறை வீராங்கனையாக களம் இறங்கி அசத்தினார். அதனைத்தொடர்ந்து, உள்ளூர் ஐடிஎப் தொடரில் கலந்துகொண்டு வெற்றிகளை குவித்த அவர், 2012 ஆம் ஆண்டு தில்லியில் வென்றதே முதல் ஒற்றையர் பட்டமாகும். புகழ்பெற்ற ஐடிஎப் இன்டர்நேஷனல் டென்னிஸ் பெடரேஷன் நடத்திய போட்டிகளில் அங்கீதாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் 14 பட்டங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் நிருபமா சஞ்சீவ், சானியா மிர்சா, ஷிகா உபராய், சுனிதா ராவ் ஆகியோரைத் தொடர்ந்து 200 இடங்களுக்குள் (181) பிடித்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவர். உள்ளூர் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் இரட்டையர் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கதாகும். கன்பிங் ஓபனில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனும் முதல் 10 இடங்களில் இருந்தவருமான சமந்தா ஸ்டோசூரை தோற்கடித்த அங்கீதா ரெய்னா, தனது வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இன்னும் 2 ஆண்டுகளில் 100 ஆவது இடத்தை பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், சானியா மிர்சா ஆகியோரை ‘ரோல் மாடலாக’ பின்பற்றிவரும் அங்கீதா, புனேவில் உள்ள பி.ஒய்.சி இந்து ஜிம்கானாவில் ஹேமந்த் பெண்ட்ரி டென்னிஸ் அகாடமியில் ஹேமந்த் பெண்டாலியிடம் பயிற்சி பெற்று வருகிறார். சர்வதேச வீரர்களுடன் விளையாட உடல் தகுதியும் மனவலிமையும் முக்கியம். இவை இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் சர்வதேச ஆட்டங்களில் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்பதை கிராண்ட்ஸ்லாம் தொடரில் பாடமாக கற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நடந்த மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் அவருக்கு திருப்புமுனை என்றே கூறலாம். அந்தப் போட்டி நமது வீராங்கனை களுக்கு சிறந்த பயிற்சிக் களமாகவும் அமைந்திருந்தது காரணம் உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாடும் அனுபவமும் அவர்களது ஆலோசனையும் கிடைத்ததாகும். வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். இருந்தாலும் எதன் மீது நாம் உண்மையான அன்பை செலுத்துகிறோமோ உழைப்பை கொட்டுகிறோமோ அதற்கான பலன் ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அங்கீதா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது கனவும் நம்பிக்கையும் நிச்சயம் ஒரு நாள் வெல்லும்!