இந்தியாவின், 2019-20 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும் என புள்ளியியல் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2019-20 நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி குறைவு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மந்தம் எனப் பல பிரச்சனைகள் காணப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 5 சதவீதமும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதம் சந்தித்தது. நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகச் சூழ்நிலையையும் மேம்படுத்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாகக் கார்ப்பரேட் வரியை குறைத்தது. ஆனால், முதலீடு செய்வதற்கு முன்னதாகவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதால் மக்களுக்கு, எந்தப் பலனும் இல்லை என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும் என புள்ளியியல் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 11 வருட மோசமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த 2018-19 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. மேலும், இரண்டாவது 6 மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.25 சதவீதமாக இருக்கும் எனத் தற்போது வெளியாகியுள்ள கணிப்புகள் தெரிவிக்கிறது. அதே சமயம், பாரத் ஸ்டேட் வங்கியின் கணிப்பில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.