tamilnadu

img

சேலம் - சென்னை 8 வழிச்சாலை அரசாணை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி


சேலம் - சென்னை 8 வழிச்சாலை அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழி பசுமை சாலை அமைக்க, தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வந்தன. சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது. குறிப்பாக 8 வழிச்சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வந்தனர். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. தனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராடி வந்தனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கூட அனுமதி வழங்காமல் அனைவரையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கைது செய்தது. 


 இத்திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த கோரியும், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மரங்களை வெட்டாமல் சாலை அமைக்க கோரியும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்குகள் 6 மாதங்களுக்கு மேலாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில் பரபரப்பான இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் சேலம் - சென்னை 8 வழிச்சாலை அமைப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.