tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : வி.ஆர்.கிருஷ்ணய்யர் நினைவு நாள்...

பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, கம்யூனிஸ்ட்டுகள் 1952தேர்தலில் போட்டியிட்டபோது, வி. ஆர். கிருஷ்ணய்யர் கூத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப்பிரச்சனைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயலசீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தையும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார். அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி. ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரிசட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அரசாங்கத்தில், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும்ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத்தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது.கேரள முதல்வர் இ.எம்.எஸ்.ஸும் வி. ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், வி. ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சனையை ஏற்படுத்தியது. காமராஜர் தலையீட்டால் பிரச்சனை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. 

இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி. ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ. 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சனை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.1959-ல் ஆட்சி கலைக்கப்பட்டபின் 1960-ல்நடந்த தேர்தலில் ஏழு வாக்குகளில் காங்கிரஸ்வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களைவைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி. ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார். 

அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர்நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி. ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். 1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர்முன் வந்தது. இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாகத்தான், நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்தார்.  அவர் பல்வேறு வழக்குகளில் முற்போக்கான தீர்ப்புகளை வழங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 100 ஆண்டுகள் வாழ்ந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் மறைந்தார்.இவரின் பெயரில் ஆண்டுதோறும் சிறந்தகல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்களுக்கு கிருஷ்ணய்யர் விருதுகள் சோக்கோ அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

===பெரணமல்லூர் சேகரன்===

;