tamilnadu

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - சிபிஎம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று (14.03.2019) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில்

நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்ற தடை எதுவும் இல்லாத நிலையில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மறுப்பது முறையற்றது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. எனவே, நிறுத்தி வைத்துள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்திட வேண்டுமென மாநிலக்குழு வலியுறுத்துகிறது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசை வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்த்துவது இந்த தேர்தலில் பிரதான கடமையாகும். இந்த மக்களவைத் தேர்தல் என்பது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினால் இயக்கப்படும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் நடைபெறும் தேச பக்த யுத்தமாகும். மதவெறி நடவடிக்கைகளை தூண்டி விட்டும், பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்ற நாசகர நடவடிக்கைகள் மூலமும், நாட்டு மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமைந்திட வேண்டும். தமிழக நலனுக்கு வஞ்சகம் இழைப்பதையே மோடி அரசு வாடிக்கையாக

கொண்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு, கீழடி அகழ்வாய்வை முடக்கும் சதி, ஒக்கி-கஜா

புயல் போன்ற இயற்கை பேரிடரின் போது உரிய நிதி ஒதுக்க மறுப்பு, ஆளுநர் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு எனமோடி அரசு தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே பரிசாக தந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு என்பது ஊழலில் ஊறித்திளைத்துள்ளது. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்கள் மீதும் கடுமையான ஊழல் புகார்கள் உள்ளன. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பாஜகவுக்கு அதிமுக அனைத்து வகையிலும் துணை நிற்கிறது. புற்றுநோய் பரப்பும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய 14 பேரின் உயிரை பறித்த கொடுமையான அரசு. எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உயர்அழுத்த மின்கோபுரம் என தமிழகத்தை

பாலைவனமாக்க பாஜக அரசும், அதிமுக அரசும் சேர்ந்து செயல்படுகின்றன. அதிமுக மற்றும் பாஜகவை ஒருசேர வீழ்த்த தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள

பொன்னான வாய்ப்பே வரவிருக்க தேர்தலாகும். அதிமுக - பாஜகவை கடுமையாக விமர்சித்த சில கட்சிகள் தற்போது எவ்வித கூச்சநாச்சமுமின்றி

தேர்தலில் கை கோர்த்துள்ளார்கள். வேலையின்மை தீர்த்திடவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், விலை உயர்வினை கட்டுப்படுத்திடவும், மூடப்பட்டுள்ள சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பாதுகாத்திட, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்திட, நதிநீர் உரிமைகளை பாதுகாத்திட, ஏரி குளங்களை தூர்வாரி நீர்வளத்தை பெருக்கிட, மகளிர் குழுக்கள் பெற்றுள்ள நுண்நிதி கடன்களை தள்ளுபடி செய்திட, கல்வி கடன்கள் தள்ளுபடி செய்திட, இந்தி திணிப்பை முறியடித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழிவகுத்திட, நீட் தேர்வினை ரத்து செய்திட, மொத்தத்தில் “ஒரு புதிய இந்திய, புதிய தமிழகம்” உருவாக்கிட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக -

அதிமுக அணியை முறியடித்து, “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி” வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுமென, தமிழக

வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறது.

 

;