tamilnadu

img

திருக்குறளைத் தடைசெய்யச் சொல்வதா? தமுஎகச கண்டனம்

சென்னை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம்,மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண்களை இழிவுபடுத்தும் “மநு ஸ்மிருதி”யைத் தடைசெய்யக் கோரி இயக்கம் நடத்திய விசிக தலைவர் தொல்.திருமாவள வன் மீது வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஊடகங்களில் இதுபற்றி நடந்த விவாதங்கள், “மநுதர்மம் சனாதன அதர்மத்தை கருத்தியல்ரீதியாக நிலைநிறுத்தவும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவுமே உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவின.இதனிடையே தினமணி நாளேடு சாதிக்கொரு நீதி பேசும் மநு அநீதிக்கு வக்காலத்துவாங்கும் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 20-11-2020அன்று “மநுவுக்கு ஏனிந்த எதிர்மனு?” என, ஆர்.நடராஜன் எழுதிய கட்டுரையை, தினமணி நாளிதழ் வெளியிட்டது. “மநு பெண்களைப் பற்றிச் சொல்வதையேதான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார். மநுதர்ம சாஸ்திரம் தடைசெய்யப்பட வேண்டுமானால், அதே காரணத்திற்காகத் திருக்குறளும் தடைசெய்யப்படவேண்டியதே” என்னும் வரிகள் பெரிய எழுத்தில் கட்டம் கட்டிப் போடப்பட்டுள்ளன. “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி?” என்று மனோன்மணியம் சுந்தரனார் சொன்னதுதான் சரி. அதற்கு மாறாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளையும் “நால்வர்ணமே லோக தர்மம்” எனும் மனுவையும் சமமாக வைத்துப் பேசும் ஆபத்தான போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.திருக்குறளில் பெண்வழிச்சேரல் போன்ற விமர்சனத்திற்குரிய சில பகுதிகள் இருக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்களையும் ஏற்கிறஜனநாயகத்தன்மையை அது உள்ளடக்கி இருக்கிறது.  அதுவுமின்றி சாதி வேறுபாடுகளை நியாயப்படுத்துகிற, பிறப்பிலேயே பேதம் கற்பிக்கிற, சமத்துவத்தை மறுக்கிறகருத்துக்கள் திருக்குறளில் இல்லை.

ஆனால் மநுஸ்மிருதி என்பது முழுக்க  முழுக்கபிராமணிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தனிமனிதக் கண்ணோட்டமாகவும் சமூக ஒழுங்காகவும் சட்டத்தொகுப்பாகவும்  இன்றளவும்  மனிதர்களை அநீதியாக பாகுபடுத்தி வரும் மநுஸ்மிருதி முற்றிலும் நிராகரிக்க வேண்டிய ஒன்றாகும். இவ்விரு நூல்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துவதையும் மநுவுக்குதடை என்றால் குறளுக்கும் தடை வேண்டும் என்று கோருவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திருவள்ளுவரை கைப்பற்ற சங்பரிவாரத்தினர் மேற்கொண்ட கபடமுயற்சிகள் கைகூடாத நிலையில் திருக்குறளை மநுஸ்மிருதியின் நிலைக்கு கீழ்மைப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இத்தகைய நச்சுக்கருத்துகளை தேடித்தேடி விதைப்பதன் மூலம் மதவெறி சனாதன சக்திகளுடனான தினமணியின் பிணைப்பு அம்பலமாகிவருகிறது. தினமணி கட்டுரையில் கூறப்பட்டுள்ள பிற்போக்கான கருத்துக்களுக்கு தமுஎகச தனது எதிர்ப்பை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;