tamilnadu

img

முன் வரிசை ஆட்டக்காரர்கள் சாகக்கூடாது என தடை விதியுங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஒரு பெரிய பிரச்சினை

நாங்க ஒரு ஃபுட்பால் டீம் சார்

எங்க ஆள் ஒருத்தன்

நேற்று தீடீர்னு செத்துட்டான்

நாளைக்கு ஃபைனல் மேட்ச்

நாங்கதான் ஜெயிக்கணும்

ஒரு கை குறையுது

செத்தவன் முன் வரிசை

ஆட்டக்காரன்

ஒரு உதிரி ஆட்டக்காரனை

அவனோட இடத்தில்

கொண்டுவர முடியாது

ஒரு ஆள் கம்மியா

விளையாடுவதில்

பெரிய பிரச்சினைகள் இல்லை

தில்லா விளையாடுவோம்

ஒரே சங்கடம் என்னவென்றால்

மைதானத்தில்

எந்தப்பக்கம் ஓடினாலும்

செத்தவன் கூடவே ஓடிவந்துகொண்டிருக்கிறான்

அவன் நிழலாக இருப்பதால்

அவனால் பந்தை

உதைக்க முடியவில்லை

அதை முத்தமிடமட்டுமே

அவனால் முடிகிறது

இது எங்களை

அமைதியிழக்க வைக்கிறது

எங்கள் கவனம் சிதறுகிறது

ஒவ்வொரு ஆட்டத்திலும்

யாரோ முக்கியமான ஒருத்தன் இல்லாமல்

ஒரு கை குறைவாக

ஓடிக்கொண்டே இருக்கிறோம்

ரொம்ப நாள்

இப்படியே ஆடமுடியாது சார்

முன் வரிசை ஆட்டக்காரர்கள்

சாகக்கூடாது என தடை விதியுங்கள்

23.12.2020

காலை 8.06

மனுஷ்ய புத்திரன்

( கருப்பு கருணாவுக்கு)

;