சமூக வலைத்தளங்களில், காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சி வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் உள்ள இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர் தடியால் அடித்து உடைக்கிறார். இதற்கிடையே வண்டியின் உரிமையாளரைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் சிறப்பு காவல் ஆய்வாளர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த விவகாரம் காவல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அந்த வீடியோவில் உள்ள போலீஸ் வாகனம் கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்தது எனவும், வாகனத்தை தாக்கியது ஓட்டுநர் மோகன் எனவும், விசாரணை செய்தது எஸ்.எஸ்.ஐ. ஹரிபாபு என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.