tamilnadu

மாரி செல்வராஜ் எனும் சாமக் கோடாங்கி!

வறுமையை, இல்லா மையை, சுரண்டலை, வர்க்க மோதலை ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து பொதுப் பார்வைக்கு வைக்க மாரி செல்வராஜ் அசாத்தியமாக மேற்கொண்டுள்ள திரை முயற்சி தான் வாழை. எந்தத் திட்டமிடுதலும்  இல்லாது மக்கள் கால காலத்திற்கும் கஷ்டத்தில் வாழுமாறு பார்த்துக் கொள்ளும் நுட்பமான சமூக அமைப்பைக் வழி நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறது இத்திரைப்படம்.

உழைப்பாளிகள் எல்லோரும் குமுறுகின்றனர். சிலர் வெடிக்கின்ற னர். யாரேனும் ஒருவர் தன்னியல் பாகத் தலைமை ஏற்குமிடத்தில், மக்கள் நியாயத்திற்காகப் போராட முன்வரத் தான் செய்கின்றனர். செங்கொடி தனியே எங்கோ உருவாவ தில்லை. அது எந்தப் போராளியின் நெஞ்சிலும் பட்டொளி வீசிப் பறந்து  கொண்டிருக்கவே செய்கிறது. அவன்  சாயும்போது போராட்டம் மரித்து விடுவதில்லை, அந்தக் கொடி மற்று மொருவர் பொங்கியெழும்போது அவரது நெஞ்சிலும் மின்ன ஆரம்பித்து விடுகிறது. 

வாழை திரைப்படத்தின் கதையை இங்கே சொல்லப்போவதில்லை. சொல்லப்போனால் அது தனியான  ஒரு கதையும் இல்லை. தனித்துவமா கச் சொல்லப்பட்ட எளிய மக்களின் வாழ்க்கை. ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமை யில் வறுமை’... என்ற அவ்வை யின் வாசகம்தான் திரைக்கதை.  பெற்ற கடனுக்குப்  பிள்ளைகளைக் கரை சேர்க்க உழைக்கும் இடத்தில் தனது  விதவைத் தாயின் கடன் சுமை, தனது எளிய கனவுகளை அழுத்து வதில் வெடித்துக் குமுறும் பள்ளிச் சிறுவன் பார்வையில் இருந்தே தொடங்கி அவனது பார்வை யிலேயே நிறைவு பெறுகிறது வாழை திரைப்படம்.

பார்வையாளரை உற்சாகப் படுத்தவோ, மயக்கத்தில் ஆழ்த் தவோ, எதார்த்த நிலைமைகளை மறந்து அமர்ந்து பார்க்கவோ அல்ல திரைக்கலை, நிஜ வாழ்க்கையைத் தீட்டிக் காட்டும் திரைச்சீலை தான் சினிமா என்ற வகைப்பாட்டில் வரு கிறது வாழை. அசலான வாழ்க்கையின்  சுவாரசியமும், அபத்தமும், அதிர்ச்சியும் தான் வாழை.

மாரி செல்வராஜ் தனது இளமைக் காலத்தில் தனக்கு நேரடியாக நேர்ந்த, தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுத் திசையமைத்த உண்மை நிகழ்வைப் புனைவோடு கலந்து வழங்கி இருக்கும் படம் இது என்று சொல்லி இருக்கிறார். அந்த இளமைக்காலத்தைத் திரையில் அச்சு அசலாக சிவனணைந்தான் பாத்திரத்தில் அவர் வடிக்கத் தேர்வு  செய்திருக்கும் இளம் திரைக்கலைஞர்  பொன்வேல் நடிப்பு அபாரம். தேசீய அளவில் விருது பெற இருப்பதற் கான சாத்தியங்கள் ஏராளம்.  தாயாராகத் திரையில் வாழும் ஜானகி,  அக்கா வேம்புவாக திவ்யா துரைசாமி,   உயிர்த் தோழன் சேகர் பாத்திரத்தில் வரும் ராகுல், போராளி கனியாக கலையரசன், ஆசிரியை பூங்கனியாக  நிகில் .... என யாவரும் அருமையான வார்ப்புகள்.

படத்தின் மற்ற முக்கிய பாத்திரங் கள் இசையும், ஒளிப்பதிவும், படக் கோவையும்.  துள்ளல், தேடல், அலை தல், அலைவுறுதல், அல்லாடுதல், அலைமோதுதல், அலறுதல் யாவுக்கு மான சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சிறப்பானது -  பாடல் களும்! வசனங்கள் எத்தனைக்கெத் தனை கூர்மையோ அத்தனைக்கு அத்தனை காட்சிகளும் கூர்மையாக அமைந்திருப்பதில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும், எடிட்டர் சூரிய பிரதமனும்  பாராட்டுக்கு உரியவர்களா கின்றனர். 

குஞ்சுகளைத் தற்காத்துக் கம்பீர மாக நடை போடும் கோழி, தன்னிடம் கேளாமல் விற்றுவிட்ட தாயின் மீது கோபமுற்றபடி தன்னைப் பார்க்கும் சிறுவனை ஆதங்கத்தோடு பார்க்கும் விலைபோன மாடு, குட்டை நீரில் தெரி யும் நட்பு முகங்கள், எட்டிப் பறிக்க வேண்டிய இடத்தில் தன்னைக் கொண்டு நிறுத்தும் பசிக்கு ஆட்டம் காட்டும் வாழைத் தார், ஒரு கைக்குட்டையே இசைத்தட்டாக ஒலிக்கத் தொடங்கும் மாயாஜாலம் என்று லயித்துப் பார்க்கவேண்டிய திரை அனுபவத்தை வழங்கி இருக் கிறார் மாரி செல்வராஜ்.  புரோக்கர் எண்ணிக்கொடுக்கும் பழைய நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுகள், பள்ளிச்சிறுவர்களின் பேச்சில் குணாவும் பாட்ஷாவும், கமல் ரஜினி விஜயகாந்த்தும் என குறிப்பிட்ட காலத்தின் கதையாக நேர்த்தியாகப் படைக்கவும் செய்திருக்கிறார்.

பறவைகள், குரைக்கும் நாய், லோடு ஏற்றி வரும் டிரக் என உயிருள் ளவை, உயிரற்றவை யாவும் பேசு கின்றன படத்தில்.  இரவு நேரத்தில் வெருண்டு படுத்திருக்கும் சிறுவனின்  உள்ளத்தில் இருக்கும் பதட்டத்தை  எதிரொலித்து நடக்க இருப்பதை யும் சொல்லிப் போகும் சாமக் கோடாங் கியை ஒரு கட்டியக்காரனைப் போலவே படைத்து விட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.    

தனது காதலை மருதாணி இலை மூலம் கடத்தும் சகோதரியின் நிமித் தம் ஒரு போராளியிடம் அதைச் சேர்க் கையில் தனது அப்பாவின் காதலுக் குரிய அரிவாள் சுத்தியல் நட்சத்திர இலச்சினையையும் சேர்த்தே ஒப் படைக்கும் சிவனணைந்தான் அதன்  பிரதியைத் தன்னுள்ளும் வைத்திருக் கவே செய்கிறான். 

‘எம் புள்ளைய ஒரு வாய் சாப்பிடக்  கூட விடாத பாதகத்தி ஆகிப் போனேனே’ என்று கடைசிக் காட்சியில்  கதறுகிறாள் தாய், அது சமூகத்தின்  கதறல். இயலாமையின் வெடிப்பா கவே ஒலித்தாலும் விடியலை நோக்கிய கதறல்.  இது தான் வாழை  எனக்குச் சொல்லியது.

- எஸ்.வி.வேணுகோபாலன்

வாழைப்பழத்திற்கு பின்னாடி   இத்தனை பெருங்கதையும் அழுகையும்

வெ ளய வைக் கிற அல்லது உருவாக்குகிற எதையும் உபயோகப்படுத்துற உரிமை உழைப்பாளிக்கு இல்லை. கடல் போல வாழை வௌச்சு கெடந் தாலும் ஒத்த வாழைப்பழத்தை திங்கிற உரிமையில்லாம சிவன னைந்தன் அடிபடும் போதும் கண்ணீ ரோடு ஓடும் போது அவனுடன் சேர்ந்து  நாமும் ஓடுகிறோம். 

வெறும் ஒரு வாழைப்பழத்திற்கு பின்னாடி இத்தனை பெருங்கதை யும் அழுகையும் இருக்கா? மிக குறைவாக நாம் மதிக்கிற ஒரு சிறு  வாழைப்பழத்தின் துளி தித்திப்பின்றி தான் வாழை நம் கைகளில் தவழ் கிறதா?

இனியான வாழ்வில் குற்றவுணர் வின்றி எப்படி வாழைப்பழம் சாப்பிடப்போகிறேன் என்று தெரிய வில்லை. அந்த பெரிய விபத்து நடக்காமல் போனாலும் இதுவொரு அழுத்தமான பதிவு தான் என்று தோன்றுகிறது.

மனசுக்குள் எப்போதும் மினுங்கி கொண்டிருக்கும் பால்யத்தை தொலைத்து விடாமல் அந்த ஆச்சரியங்களுடனும் சகதியுடனும் அழுகையுடனும் பசியோடும் மாரி செல்வராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

பாதவத்தி என்பவள் முலைக் காம்பை பச்சைப்பிள்ளையின் வாயிலிருந்து உருவியெடுத்துவிட்டு காட்டு வேலை பார்ப்பவள். அந்த வார்த்தையின் அர்த்தத்திற்கு ஒரு கதையிருக்கிறது என்றால் அது வாழை.

தாது வருடப் பஞ்சத் துயரத் திற்கு நல்லதங்காள் கதை எப்படி யொரு படிமமோ அது போன்று பாதவத்தி வார்த்தைக்கு வாழை ஒரு படிமம். பாதவத்தி பாடலைக் கேட்கும் போது  தொண்டைக்குள் முட்டிக் கொண்டு நின்றிருந்த துக்கம் கரையுடைந்து கண்ணீராக வெளிவரு கிறது.

சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்தின் இன்னொரு கதாநாயகனாக நின்று படத்தை தன் இசையில் தாலாட்டுகிறார்.

ரெண்டு வாழைத்தாரை  சிறுவன் பொன்வேல் எப்படி தலை யில்  சுமந்தான் என்று தெரியவில்லை. அந்த இருசிறுவர்களும்  வாழைத்தார்களை சுமந்து வரும் காட்சி பார்க்க முடியாமல் விழிகளை மூடிக்கொண்டேன். எத்தனை வன்முறை கொப்பளிக்கும் காட்சி. அந்த சிறுவனின் கழுத்தைத் தடவி  விடவேண்டும் மாரியின் கழுத்தை யும் தான். துயரம் அப்பிய வாழ்வில்  டீச்சர் மீதான இனம் புரியாத அன்பு படம் பார்க்கும் பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. காணாமல் போன மாட்டை ராஜவேல்  தேடி ம்மா ம்மா என்று கத்தி காடு  மேடெல்லாம் திரியும் போது எப்படி யாவது அந்த மாடு கிடைத்து விட வேண்டுமே என்ற பரிதவிப்பு ஏற்படுகிறது.

தேனி ஈஸ்வர் தன் கேமராவோடு வாழைத்தோட்டத்திற்குள் உருண்டு புரண்டு ஓடி அழகியலை பதிவு செய் துள்ளார்.

எப்போதுமே ஈரானிய சினிமா சிறுவர்களின் மனஉலகத்தை மிக  அற்புதமாக பதிவு செய்யும். தமிழில்  அப்படியொரு முயற்சி. மாரிசெல் வராஜ்க்கு என் மனமார்ந்த வாழ்த் துகள்.

- வசந்தபாலன்