சென்னை,அக்.2- இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் மதநல்லிணக்கத்திற்காகவும் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காந்தி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது “அகிம்சை ஆயுதமாக” அண்ணல் காந்தியடிகள் அவர்களால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளைத் தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை இராட்டைகளைக் கொண்டு நூல் நூற்பதிலும், கதர் இரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.
அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நன்னாளையொட்டி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டுமென மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவ இந்தியாவை மலரச் செய்வோம்
அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது.
காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.