சென்னை:
நீதிமன்றத் தீர்ப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 1988 ஜூன் 1-க்கு முன்புள்ள பணிக்காலத்தைக் கணக்கிட்டு தேர்வு நிலை/ சிறப்புநிலை வழங்க 65 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2009ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றனர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை(நிலை) எண் 210 நாள் 14.8.2009 பிறப்பிக்கப்பட்டது இதே போல் 2010ல் வழக்கு தொடர்ந்த தீர்ப்புப்பெற்ற ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 210/2009ன் பயன்களை அளிக்கஅரசாணை எண் 190/2010 பிறப்பிக்கப்பட்டது. மேலும் சில ஆசிரியர்கள் வழக்குதொடர்ந்து பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 2012ல் அரசாணை எண்146/2012 பிறப்பிக்கப்பட்டது. அரசாணை எண் 210/2009ன் பயன்களை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றுநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் 2012ல் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஹரிபரந்தாமன் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 2015ல் தீர்ப்பளித்தார்.
பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு
2015ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 2017ல் பள்ளிக்கல்வித் துறை டபிள்யூ. ஏ. 304/2017 மேல்முறையீட்டு வழக்கை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தொடுத்தது. பள்ளிக்கல்வி துறையின் அனைத்து மேல்முறையீடு களும் தள்ளுபடி செய்யப்பட்டது.தீர்ப்பு வெளிவந்து ஓராண்டும் பதினொரு மாதங்களும் ஆன பிறகும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தொடக்ககல்வி இயக்குநர் அரசாணைபெற தமது முன்மொழிவை பள்ளிக்கல்விச் செயலாளருக்கு இன்றுவரை அனுப்பவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் டிசம்பர் 11 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி ஆணையாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஆகியோரை சந்தித்துநீதிமன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்பட தொடக்கக்கல்வி இயக்குநரின் முன்மொழிவை கோரிப்பெற்று நிதித்துறை ஒப்புதலுடன் பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.