tamilnadu

முழுமையான வெற்றி கிடைக்கும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்,25-மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர் காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் திமுக-வின் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கிஞ்சிற்றும் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து மே 23 ஆம் தேதிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம். அயராத உழைப்பிற்கும், அதற்கு மக்கள் தந்த ஆதரவிற்கும், முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது.ஆட்சிக் காலத்தின் கடைசி நாட்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளோருக்கு இது தெரியும். அதனால்தான், திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுக்க பல தகிடுதத்தங் களைச் செய்தனர்.பணத்தால் வாக்குகளை விலை பேசும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல, தங்கள் செயலை மறைக்க திமுக-வின் மீது பழியைப் போட்டு வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தினர்.

மக்களிடம் உண்மை அம்பலப்பட்ட நிலையில், மதரீதியாக சாதிரீதியாக வன்முறைகளைத் தூண்டும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கினர். கனன்று கொண்டிருக்கும் வன்முறை நெருப்பை சுயலாப நோக்கில் விசிறி விடும் வேலையை வாக்குப் பதிவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுடைய தோல்வி பயத்தின் காரணமாக வெளிப்படும் மனப்பதற்றத்தின் விளைவுகள். இவற்றைத் தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார் கள்; வெறுத்து விலக்கி வைப்பார்கள். வன்முறையைத் தூண்டி விட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்ச மிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் இயல்பான மோசடிகளால் கழகத்தின் வெற்றியைத் தட்டிப் பறித்து, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என மாநிலத்தில் ஆளுகின்ற அடிமை அதிமுக ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, கணக்குப் போடுகிறார்கள்.அது தப்புக் கணக்கு, பிற்போக்குத்தனமான பிழைக் கணக்கு என்பதை மக்கள் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிரூபிக்கத் தயாராகிவிட்ட நிலையில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுக-வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது.மக்கள் அளித்த தீர்ப்பை மாற்றும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய முடியுமா என்ற திட்டத்துடன்தான் மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒரு பெண் அதிகாரியை நுழையச் செய்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள ஆவணங்களைக் கைப்பற்றி மோசடி செய்ய முயற்சித்த மோசமான நடவடிக்கை அம்பலமாகிவிட்டது.கடல் போன்ற மக்களவைத் தேர்தல் களத்தையும், ஆறு போன்ற 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு கடந்தது போலவே, வாய்க்கால் போன்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் செயலாற்றிட வேண்டும்.

கடலிலும் ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர்கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழி மறித்து திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள்.திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, திமுக பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார் கள். அதனை முறியடித்திடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.ஆட்சி மாற்றத்திற்கு நம்மைவிட அதிக ஆர்வமாக உள்ள வாக்காளர்களின் மனதில், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற உண்மையையும் நம்பிக்கையையும் நன்கு விதைத்திடும் வகையில் இடைத்தேர்தல் களப் பணிகள் அமையட்டும். அது முழுமையான வெற்றியாக மலரட்டும்.ஏப்ரல் 18-ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே19-ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி.இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.

;