சென்னை,டிச.14- வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்களுக்கு விற்க வழிவகை செய்யும் வங்கிகள் சட்டதிருத்த மசோதாவை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய முனைப்புக் காட்டி வருகிறது. நாட்டின் 13 பெரிய நிறுவனங்கள் ரூ.4,46,800 கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. இந்தக் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ரூ. 2,85,000 கோடி லாபம் பெற்றுள்ளன. விவசாயிகள், சுயதொழில் புரியும் பெண்கள்,
மாணவர்கள் பெற்றுள்ள கடனை வசூலிப்பதில் இழிவான நடைமுறைகளை பின்பற்றும் வங்கிகளின் நிர்வாகம், கார்ப்பரேட் நிறுவனங்களின் கருணைப் பார்வைக்காக காத்துக் கிடக்கின்றது . பொதுத்துறை வங்கிகள் என்பதால் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ரூபாய் 100 கோடிக்கும் அதிக மாக தொகையை போட்டு வைத்துள்ளனர். உயிர்வதை சகித்து. பாடுபட்டு மக்கள் சேமித்த பணம் முழுவதையும் பெரும் நிறுவனங்கள் எடுத்து விழுங்க, நாக்கில் நீர் சொட்ட காத்து நிற்கின்றன. இதற்கு ஆதரவாக பாஜக ஒன்றிய அரசு வங்கிகள் சட்ட திருத்த மசோதா தயாரித்து, அதனை சட்டமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்புக்கான சேமிப்பு நிதியை, பெருநிறுவனங்கள் சட்டபூர்வமாக கொள்ளை யடிக்க துணை போகும் ஒன்றிய பாஜக அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோதச் செயலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களும் வேலை நிறுத்தம் செய்வ தாக அறிவித்திருப்பதை கட்சி ஆதரிக்கிறது போராட்டம் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.