இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி தமிழ்நாட்டில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.