கோவை:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள்விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கோவையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கோவையில் விவசாயிகள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக புதன்கிழமையன்று கோவை கணியூர் சுங்கச்சாவடியை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் ஒன்றிய செயலாளர் எம்.ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பிரிமியர் செல்வம், கனகரத்தினம், பெரியசாமி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட ஏராளமானோர்பங்கேற்றனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்துஏராளமான காவல்துறையினர் சுங்கச்சாவடி முன்பு குவிக்கப்பட்டிருந்தனர். இதனையும் தாண்டி நூற்றுக்கும்மேற்பட்ட விவசாயிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.