கோயம்புத்தூர், ஜூலை 7- கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஏடிஜிபி அருண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவை சரக டிஜஜி விஜயகுமார், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர், பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். சென்னையில் இருந்தவர்கள், சமீபத்தில் கோவையில் இவருடனேயே வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு முகாம் அலுவலகம் திரும்பியுள்ளார். பின்னர் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு உள்நுழைந்தவர், வரவேற்பு அறையிலேயே தனது நெற்றியில் துப்பாக்கியை பதித்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, முகாம் அலுவலகத்தில் இருந்த காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயர் காவல்துறை அதிகாரியாக உள்ள விஜயகுமார் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்கொலைக்கான காரணங்கள் இதுவரையில் முழுமையாக வெளிவரவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டம் ஒழுங்கு கூடுதல்டிஐஜி அருண்குமார் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மரணமடைந்த டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
ஏடிஜிபி அருண் பேட்டி
கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் ஏடிஜிபி அருண் பேசுகையில், டிஐஜி விஜயகுமார், அர்ப்பணிப்போடு காவல் துறையில் பணிபுரிந்தவர். அவர் எங்கெல்லாம் பணிபுரிந்தாரோ அங்கெல்லாம் பாராட்டுகளைத் தான் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்கையில், முதல் கட்டமாக, கடந்த சில வருடங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார், அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவரிடம் நாங்கள் பேசினோம், அப்போது விஜயகுமார் நான்கு தினங்களுக்கு முன்பு அந்த மருத்துவரிடம் பேசி மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் உரிய மருத்துவ ஆலோசனைகள் கொடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் இவரை கவுன்சில் செய்துதான் இருந்துள்ளார்கள். இவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் தான் அவரது மனைவி மற்றும் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கோவை வந்து அவருடன் சேர்ந்து இருந்து வந்துள்ளனர். இப்படிப்பட்ட கட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு மருத்துவ பிரச்சனையினால் நிகழ்ந்த சம்பவம். காவல்துறையில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன உளைச்சல் என்பது வேறு மன அழுத்தம் என்பது வேறு. மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் மற்றும் மருத்துவர் உதவி தேவை, இவர் இந்த இரண்டையும் செய்துதான் வந்துள்ளார் அதனையும் மீறி இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. நான் தற்பொழுது வரை விசாரித்ததில் குடும்ப பிரச்சனை எதுவும் கிடையாது, அவரது மனைவி மற்றும் குழந்தை அவருக்கு மிகவும் அரவணைப்பாகவும் ஒத்துழைப்பும் நல்கி தான் வந்துள்ளார்கள்.
அவர் ஒரு நல்ல இடத்தில் இருப்பதால் பணி சுமையும் கிடையாது. காவல்துறை இறுக்கமான பணி என்பதைப் போல் பல்வேறு பணிகள் இறுக்கமாகத் தான் உள்ளது. மருத்துவர் பணியும் இறுக்கமானது தான். இது ஒரு தனி மனிதர் முடிவு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் நெற்றியில் சுட்டுக் கொண்டுள்ளார். அவர் இதுவரை தனக்கு ஓய்வு வேண்டும் என்று எதுவும் கேட்டதில்லை. டீப் டிப்ரஷனுக்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்துள்ளார். அவரை நேற்று கூட மேற்கு மண்டல ஐஜி பார்த்துள்ளார். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அவருடன் பேசி உள்ளார். அவர் இரண்டு மூன்று தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதனை அவர்கள் சரி செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர். அவருடைய மருத்துவருடன் நாங்கள் பேசும்பொழுது விஜயகுமாருக்கு, ஓசிடி கம் டிப்ரஷன் என்று மருத்துவர் கூறுகிறார், அதற்கான மருந்துகளையும் அவர் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அனைத்தையும் தெரிவிக்கின்றோம் என்றார். முன்னதாக, உயிரிழந்த டிஜஜி விஜயகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.