மே.பாளையம், ஏப். 22-கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் துவங்கி அதன் அறுவடை துவங்கியுள்ள நிலையில் குரங்குகள் மற்றும் யானைகளால் நூற்றுக்கணக்கான பழங்கள் வீணாகி வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார்பகுதியில் அரசுக்கு சொந்தமான25 ஏக்கரில் தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை உள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில் ஆண்டு முழுவதும் சீரான சீதோசனம் நிலவும். இங்குள்ள கல்லார் பழப்பண்ணையில் அரிய வகை பழங்களான மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், மலேயன் ஆப்பிள், முட்டைப்பழம், லிட்சி உள்ளிட்டவை விளைகின்றன. மேலும் இப்பண்ணையில் அறுபது பலா மரங்களும் உள்ளன.தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் இப்பலா மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் காய்த்து நன்கு வளர்ந்துகாட்சியளிக்கின்றன. கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு பலா மரங்களில் அதிக காய்கள் பிடித்துள்ள நிலையில் இவற்றை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணிகளும் துவக்க உள்ளன. ஆனால், பகல்நேரங்களில் குரங்கு கூட்டங்களும், இரவு யானை கூட்டங்களும் பண்ணைக்குள் புகுந்து பலாப்பழங்களை சேதப்படுத்தி வருகின்றன. குரங்குகள் மரத்தின்மீதேறி பழங்களை கடித்து குதறி விடும் நிலையில், இரவுநேரங்களில் நுழையும் யானைகளோ பலா மரங்களையே சாய்த்து விட்டு பின்னர் பழங்களை உண்ண முயற்சிப்பதால் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. அதிக சுவையுடைய இப்பலாப்பழங்களை பறித்து கிலோ பத்து ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் இவற்றை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பழங்கள் நன்கு பழுக்கும் முன்பே குரங்குகள் இவற்றை கடித்து விடுவதால் பயனற்று போய் விடுகின்றன. மேலும், தனது நுகர்வு திறனால் பலாப்பழங்களை தேடி பண்ணைக்குள் நுழையும் யானைகளால் பலா மரங்கள் மட்டுமின்றி பிற மூலிகை செடிகளும், நாற்றுக்களும் சேதமடைவதாக கூறும் பண்ணை ஊழியர்கள், இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.