கோவை, மே 21-போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012 விதிமுறையின்படி பள்ளி பேருந்துகள் உள்ளதா எனகோவை காவல் பயிற்சி மைதானத்தில் செவ்வாயன்று ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கோவை மாநகரில் உள்ள 221 பள்ளிகளைச் சேர்ந்த 1,172வாகனங்கள் தரக்கட்டுப்பாடு குறித்து செவ்வாயன்று துவங்கியது. இந்த ஆய்வினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், பேருந்துகள் அதிகவேகத்தில் இயக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டை அடுத்து, அரசு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளின் வேகம் குறித்து தணிக்கை செய்யப்படும். பள்ளி வாகனங்களில் பிரேக், என்ஜின் ஆகியவற்றின் தரம், வாகன படிக்கட்டுகளின் உயரம், அவசரகால வழி முறையாக இயங்குகின்றதா என்பன உட்பட பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பள்ளிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பள்ளி வாகனங்களுக்கென விதிக்கப்பட்ட பேருந்தின் வண்ணம் உட்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தும். ஆகையால் விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்தார். முன்னதாக, பள்ளி வாகனஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்துகளை உபயோகித்து வருகின்றனர். ஆகையால் குழந்தைகளின்பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார். பின்னர் ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களின் முகப்பில் ஆய்வுக்கு உட்பட்டது என்ற வில்லையை ஒட்டினார். இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியிலும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.