tamilnadu

img

அரசின் அலட்சியத்தால் குழந்தைக் கனவோடு மரித்துப்போன 15 கர்ப்பிணிகள்

கெட்டுப்போன ரத்தம் செலுத் தப்பட்டதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அரசு ரத்த வங்கிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரத்தத்தை முறையாகப் பராமரிக்காததால், அவை கெட்டுப்போகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் நல்ல நிலையில்தான் உள்ளது என அதற்குப் பொறுப்பான மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்பிரச்சனை குறித்து மகப்பேறு துறையின் மூத்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தருமபுரி, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை ரத்த வங்கிகளில் செல்கள் அழிந்த அல்லது காலாவதியான (spoiled blood) ரத்தம் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டபோதுதான் இது தெரியவந்தது. காலாவதியான ரத்தத்தை செலுத்தும் போது கர்ப்பிணிகள் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பொதுவாக இதுபோன்ற ரத்தம் ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் கர்ப்பிணிகளுக்கு வலிப்பு (fits) ஏற்படும். பின்னர் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கும். பின்னர் அது மரணத்திற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ரத்தத்தின் அளவு 50 மி.லி.க்கும் குறைவாக உள்ளது எனத் தெரிவித்த மூத்த மருத்து

வர்கள், அது குறித்து மேலும் விளக்கமளிக்க மறுத்துவிட்டனர்.மேலும் ரத்த வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரத்தம் 2 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் குளிரில் பராமரிக்கப்படவேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் உள்ள செல்கள் அழியாமல்இருக்கும்.


இவை அனைத்தும் இந்த ரத்த வங்கிகளில் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. விசாரணைக்குப் பின்னர் மேற்கண்ட மூன்று ரத்த வங்கிகளில் பணிபுரியும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் நாராயணசுவாமி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகந்தா மற்றும் 12க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவை கழக இயக்குநர் மருத்துவர் என்.ருக்மணி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு அரசுப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஒப்பந்தப்பணி (contract) அல்லது அவுட் சோர்ஸ் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு எதிராகவும் புகார்கள் பதிவு செய்து தமிழ்நாடு மாநில மருத்துவக் கவுன்சிலிடம், இதுகுறித்த தகவல்களைச் தாக்கல் செய்ய வேண்டும். செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த கவுன்சிலிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த சம்பவத்தையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் மகப்பேறியல் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான கர்ப்பிணிகள் இறந்ததற்கு கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. ரத்த வங்கி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது,அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரத்தம் நல்ல ரத்தம் என, மருத்துவர்கள் சான்று அளித்திருந்தாலும், அவற்றை உரிய நிபுணர்களைக் கொண்டு மேலும் ஒருமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இதுதான் விதி என சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்த வங்கிகளில் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் தவறுகளின் ஒரு பகுதியாகத்தான், கடந்தாண்டு நவம்பர் மாதம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு எச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால், அந்த ரத்தம் நல்ல ரத்தம் என ரத்த வங்கியின் மேலாளர் நற்சான்றிதழும் அளித்திருந்தார். இதுபோன்ற அலட்சியப் போக்கால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநர் கே.செந்தில்ராஜ் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளார். இந்த மருத்துவமனைகளில் மகப்பேறுக்காக வந்திருந்த பெண்களில் சிலர் அடுத்தடுத்து திடீரென உயிரிழந்ததையடுத்து அவற்றுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கத்தொடங்கியபோது அதற்கு காலாவதியான ரத்தம்தான் காரணம் என்பது தெரியவந்தது. ஏற்கனவே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரத்த வங்கிகளில் நடத்திய ஆய்வில் பல குறைபாடுகளும் விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


பல ரத்த வங்கிகளில் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குளிர்பதனப் பெட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததும் ஆய்வில் தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரத்த வங்கி குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள ரத்தம் 2 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியல் குளிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே அவற்றில் சிகப் பணுக்களின் செயல்பாடு உயிரோட்டத்துடன் இருக்கும். அரசுத்துறையில் தரக்கட்டுப் பாடு சான்று அளிக்கப்பட்ட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்தால் விநியோகிக் கப்படும் ரத்தப் பைகள் மட்டுமே பயன்படுத் தப்படவேண்டும். ஆனால் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது தரச்சான்று அளிக்கப்படாத பைகளும் அங்கு இருந்தது தெரியவந்தது. மேலும் தரமான பைகளும் தரமற்ற பைகளும் கலந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் இதற்கான ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதுபோன்ற பல கவனக்குறைவுகளும் தரமற்ற பைகள் பயன்படுத்தப்பட்டதால் ரத்தம் கெட்டுப்போய் அது பல பெண்களின் உயிரை பலிவாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். தமிழகமக்களின் நல்வாழ்வை குட்கா நிறுவனங்களிடம் அடகுவைத்தவர்தான் இவர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக இவர்மீது வருமான வரித்துறைக்கு பலமுறை புகார்கள் சென்றன.இதனால் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனைகளும் நடைபெற்றன. ஆனால் மோடியின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி இந்த அமைச்சரை பாதுகாத்து வருகிறார். அப்படிப்பட்ட அமைச்சரின் துறையில் இதுபோன்ற கோளாறுகள் நடந்திருப்பதாலும் ரத்தப் பைகள் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாலும் சுகாதாரத்துறை முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

;