உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தமிழக அணியான சென்னை அணி சூதாட்ட பிரச்சனையால் 2 ஆண்டுக் காலம் தடை உத்தரவு பெற்றது. இந்த காலகட்டத்தில் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிவார ணம் வழங்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) என்ற பெயரில் டி-20 தொடர் நடத்தியது. கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் தற்போது 4 சீசன் நிறைவுபெற்றது. தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடரில் விளையாடிய வீரர்கள் சிலருக்குச் சூதாட்ட தரகர்கள் குறுஞ்செய்தி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்ததாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட வீரர்கள் அழைப்பை நிராகரித்தனரா? இல்லை சூதாட்டத்தில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் பிசிசிஐ ஊழல் தடுப்பு விசாரணையில் குதித்துள்ளது. விசாரணை முடிவில் இந்த விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதால் டிஎன்பிஎல் தொடருக்குச் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சனையில் நமது பெயரும் இருக்குமோ? என்ற அச்சத்தில் தமிழக இளம் கிரிக்கெட் வீரர்கள் பதற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.