tamilnadu

img

விளையாட்டுக்கதிர்: பாதை மாறிய பயணம்... - சி.ஸ்ரீராமுலு

“கற்பனை செய்ய முடியாத வகையில் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டாலும் அவரது குடும்பம் செய்த தியாகங்கள் அனைத்தும் கால்பந்து விளையாட்டில் அவர் உச்சத்தை எட்டுவதற்கான எரிபொருள். அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை கால்பந்து விளையாட்டின் மூலமே வென்று வருமையை மீட்டெடுத்து குடும்பத்துடன் புதிய உலகில் பயணிக்கும் அந்த கால்பந்து நட்சத்திரம் வளர்ந்த கதையை பார்ப்போம். உலகில் கால்பந்து விளையாட்டுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சிறு வயதிலிருந்தே கால் பந்தை உதைக்க துவங்கிவிடுவார்கள். சின்னஞ்சிறிய குட்டி நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் வரைக்கும் இதற்கு விதிவிலக்கல்ல. விளையாட்டு உலகில் சாதிக்க பயிற்சி மட்டுமல்ல குடும்பத்தில் ஆதரவும் அவசியம். அப்படி சாதித்தவர்களில் ஒருவர்தான் ஓலா அய்னா.
‘சூப்பர் ஈகிள்ஸ்’
இங்கிலாந்து நாட்டில் பிறந்து, வளர்ந்து கால்பந்து வீரர் ஓலா அய்னா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான தொடரில் தனது 23 ஆவது வயதில் முதன்முதலாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.  ஆப்பிரிக்க கண்டத்தில்  மிக வலுவான அணிகளில் ஒன்றான நைஜீரியா அணியில் இடம் பிடிக்க அவர் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. முதல் போட்டியிலேயே அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. அன்றைய தினம் அந்த மைதானத்தில் அவரது கால் பதிக்காத இடமே இல்லை என்பதால் அவரது ஆட்டத்தை அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் கொண்டாடின. அதனைத் தொடர்ந்து நடந்த ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரில் நைஜீரிய அணியை மூன்றாவது இடம் பிடிக்கவும் செய்தார்.
மறக்க முடியாத தருணம்...
ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் 23 வயதாகும் ஓலா அய்னாவின் தந்தை ஒலுஃபெமி, தாய் எஸ்தருக்கு நான்கு மகன்கள். இளைய மகன் ஓலா தினமும் கால்பந்து பயிற்சிக்கு சென்றுவர கார் ஒன்று தேவைப்பட்டது. அந்த சமயம் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.  சாப்பாட்டுக்கு மட்டுமே தந்தையால் உதவி செய்ய முடிந்தது. ஆனால் அவரது பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக புதிய புதிய வேலைகளை தேடி அலைந்து திரிந்தனர். உள்ளூர் கிளப் அணிகளில் ஒன்றான டொரினோ அணிக்காக ஓலா விளையாடி வந்தபோது,  கால்பந்து பயிற்சிக்காக வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சொந்த வீட்டை இழக்க நேர்ந்தது. அந்த நேரம் குடும்பத்தின் சூழல் தலைகீழாக மாறியது. குடும்பத்தின் சூழ்நிலை மேலும் மோசமாக்கி அந்த சம்பவம் ஓலா அய்னாவின் ‘இருண்ட காலம்’. ஆனால் அதுவே வாழ்வின் ‘முக்கிய பாடம்’ என்பதையும் கற்றுக் கொள்ள முடிந்தது.
இளம் கன்று...
கருப்பினத்தவரான ஓலா அய்னா பிறந்தது இங்கிலாந்து நாட்டில். அந்த நாட்டின் பொக்னர் ரெஜிஸ் கடற்கரையில் சிறுவர்களோடு சிறுவராக கால்பந்தை உதைக்க துவங்கினர். அந்தக் கடற்கரையில் நடந்த சிறுவர்களுக்கான கால்பந்து தொடர் மூலம் கால்பந்து விளையாட்டில் அறிமுகமானார். தனது அசாத்தியமான திறமையால் ‘மிகவும் மதிப்புமிக்க வீரர்’ என அந்நாட்டு ரசிகர்கள் போற்றப்பட்டார். அப்போது வயது 10. ஓலா அய்னாவின் ஆட்டத்தை பார்த்து வியந்த கிளப்பு உரிமையாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான அவருக்கு வயது 10 என்பதை நம்பவில்லை. அதற்காக பிறப்புச் சான்றிதழை  கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிளப்பாக சுற்றித் திரிந்தார். ஒருவழியாக பிரிட்டிஷ் செல்சீ அணியும்,  டோட்டான் ஹோம் அணியும் ஓலாவுக்கு பயிற்சி அளிக்க முன் வந்தன. டோட்டான் அணியோடு ஒப்பந்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளில் அந்த நிர்வாகம் மிக மட்டமாக நடந்து கொண்டதால் அதை நிராகரித்து விட்டார். செல்சீ அணியில் சேர்ந்தார். ஆனால், தினமும் பள்ளி முடிந்ததும் பயிற்சிக்கு செல்ல வேண்டும். பயிற்சி மைதானம் பல பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நடந்து சென்று பயிற்சியை முடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பி அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலைமை. வேறுவழியின்றி தினமும் பயிற்சிக்காக காரில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கிடையில் விடாப்பிடியாக பயிற்சியை மேற்கொண்ட ஓலா, தனது தாய் நாட்டில் (இங்கிலாந்தில்) 2011- 12 ஆம் ஆண்டுகளில் 16 வயதுக்குட்பட்ட இளையோர் அணியிலும் அதனைத்தொடர்ந்து 20 வயதுக்குட்பட்டோர் அணிக்காகவும் தேசிய அளவில் விளையாடி முத்திரை பதித்தார்.
கண்டம் விட்டு கண்டம்...
2007 ஆம் ஆண்டு சீசனில் பள்ளி மாணவர்களுக்காக இங்கிலாந்தின் செல்சீ அணியில் பதினோராவது வயதில் விளையாட ஆரம்பித்தார். யூ-18, 19, 21 வயது அணிகளில் அந்த அணிக்காக தொடர்ச்சியாக விளையாடினார். பிறகு, 2016 ஆம் ஆண்டில் அதே அணியில் தொழில்முறை போட்டிகளில் களமிறங்கி அந்த அணியின் வெற்றிகளுக்கு தூணாக நின்றார். ஹல் சிட்டி அணிக்காக சில போட்டிகளில் விளையாடினார். மேலும் சில அணிகளோடு பயணித்த போது சிறந்த லீக் தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் கோல் மழை பொழிந்த ஓலா அய்னாவுக்கு சர்வதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பிரகாசமானது. ஹல் சிட்டி அணிக்காக ஆடிய போது பல்வேறு அனுபவங்களை கற்றுக் கொண்டார் ஓலா. பின்னர் இத்தாலியன் புகழ்பெற்ற கிளப்புகளில் ஒன்றான டொரினோ அணிக்கு மாறினார் அங்கு டேவிட் வில்லா போன்ற புகழ்பெற்ற வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் அதிரடி ஆட்டத்திற்கு புகழ் சேர்த்தது. இருபது வயதுக்கு பிறகு இங்கிலாந்தை விட்டு வெளியேறி ஆப்பிரிக்க கண்டத்தின் நைஜீரியா அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். செல்சீ கிளப் அணியின் பயிற்சிக்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த கார் பழுதாகி பாதியிலேயே நின்றது எவ்வளவோ முயற்சி செய்தும் சரி செய்ய முடியவில்லை. குறித்த நேரத்திற்குள் பயிற்சிக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைமை. உடனே அவரது தந்தை அதே இடத்தில் அந்தக் காரை வேறொருவருக்கு விற்பனை செய்து விடுகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு தந்தையும் மகனும் ரயிலில் பயணித்தனர். அந்த பயணம்தான் ஓலாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் முன்னேற்றத்திற்கு அவரது பெற்றோரின் உழைப்பும் பங்களிப்பும் அவசியம் என்பதை ஓலா அய்னாவின் வாழ்க்கை உணர்த்துகிறது.

;