tamilnadu

img

கால்பந்தின் வளரும் ‘ஹீரோ’

“இந்திய அணியில் இடம் பிடித்து சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்த இளம் வீரர் உள்ளூர்ப் போட்டிகளில் சூறாவளியாகச் சுழன்று வருகிறார்”. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அப்பா அகமத், அம்மா ரிஸ்வானா, தம்பி கபீர் ஆகியோருடன் வசித்து வரும் முகமது லியாகத், சிறு வயதில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஆர்வத்தை காட்டி வந்தார். அதன் பிறகே கால்பந்து பக்கம் தலையை காட்டினார். ஜூனியர் லீக் (15 வயதுக்குட்பட்டோர்) சென்னை மண்டல கால்பந்து போட்டியின் கடைசி லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணியை பந்தாடிய முகமது லியாகத் 3 கோல்கள் அடித்து சென்னை சிட்டி எப்.சி.யை அடுத்தச் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். கிரிக்கெட் மட்டையுடன் பந்துடனும் திரிந்து கொண்டிருக்கும் சென்னை மாநகர மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கால் பந்தாட்டத்தில் கலக்கி வரும் முகமது லியாகத், ஆசான் மெமோரியல் பள்ளியில் படிக்கும் பொழுது பத்து வயதில் கால்பந்தை உதைக்க துவக்கியிருக்கிறார். ஆனாலும் சேத்துப்பட்டு சர்.முத்தையா பள்ளிதான் அவரை முழு கால்பந்தாட்ட வீரனாக மாற்றியது. முறைப்படி பயிற்சியில் சேர்ந்து பள்ளி அணிகளில் விளையாட துவங்கியதும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியிலிருந்து மெல்ல மெல்லத் விலக ஆரம்பித்து கால்பந்தில் முழுவதும் முழுகினார். அப்போது பலரும் பல விதமாகப் பேசி மனதை மாற்ற முயற்சித்துள்ளனர். இருப்பினும் உதைப்பதை விடுவதாக இல்லை.  கால்பந்து நுணுக்கங்களை முறையாக கற்றுக்கொண்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில்  முத்திரை பதிக்க, மிக விரைவில் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். இளம் வயதிலேயே சிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்தது சென்னையின் எப்சி அணி தேர்வாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்த கணமே கொத்திக் கொண்டனர். சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் மிக இளம் வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த முகமது லியாகத்திற்கு, இளம் வீரர்களின் பயிற்சி தலைவர் சபீர் பாட்சாவின் வழிகாட்டுதலும் தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் ஊக்கமும் இவரை மேலும் வளர்த்து எடுக்க இந்திய ஜூனியர் அணியில் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு கால்பந்து கழகமும் அகில இந்திய கால்பந்து கழகமும் இணைந்து சென்னை நேரு பூங்காவில் தேசிய அளவிலான தேர்வு முகாம் நடத்தியது. இதில் தமிழகத்திலிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 5 பேர் மட்டுமே தேர்வாகினர். அதில் ஒருவர்தான் முகமது லியாகத். இதுபோன்ற தேர்வு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தது. இந்த பயிற்சி முகாம்களில் தேர்வானவர்கள் ஒடிசா மாநிலத்தில் நடத்திய சிறப்பு பயிற்சி முகாமுக்குள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த பயிற்சியில் பிடி நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே சென்றது. அதை தாக்குப் பிடிக்காமல் ஏராளமானவர் ஓட்டம் பிடித்தனர். பலரை பயிற்சியாளர்களே திருப்பி அனுப்பினர்‌. முடிவில் எஞ்சியது 32 பேர் மட்டுமே. அதில் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே. அவர்தான் இந்த முகமது லியாகத். இறுதியாக 23 பேர் மட்டுமே தாக்குப் பிடித்தனர். இவர்களுக்கு ஐ-லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மூன்று நாடுகள் பங்கேற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடரில் விளையாட ஐக்கிய அமீரகத்திற்கு அழைத்துச் சென்றது முகமது லியாகத் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும். உள்நாட்டில் விளையாடி வந்த இந்த இளம் வீரர், ஜூனியர் அணிக்காக ஐக்கிய அமீரகத்தில் விளையாடியது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாகும். இத் தொடரில் கால்பந்து நுணுக்கங்களை ஏராளமாக கற்றுக் கொள்ள முடிந்தது. இந்தியாவில் விளையாடியதற்கும் அமீரகத்தில் ஆடியதற்கும் நிறைய வித்தியாசத்தை காண முடிந்தது தடுப்பாட்டம் என்பதை மறந்து பெரும்பாலும் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். அவர்களைப் போலவே முகமது லியாகத் அதிரடி காட்டி எதிரணி வீரர்களை கலங்கடித்தார். 

இந்திய இளம் அணியில் இடம் பிடிப்பதற்காக அவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. கரடு முரடானவை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் எப்சி அணி உதயமானபோது எப்படியும் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயிற்சியை கடுமையாக்கினார். ஆனாலும் அந்த சீசனில் இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அடுத்த சீசனில் முதல் வீரனாக தேர்வு செய்யப்பட்டார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம்  பத்து வயதில் அசத்தலாக 23 கோல்கள் அடித்து தமிழகத்தின் மிகச்சிறந்த இளம் ஆட்டக்காரருக்கான விருதை தட்டி வந்தார்.  தேசிய அளவிலான அங்கீகாரமும் கிடைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் நடந்த  இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய சென்னை எப்சியின் யு-13 அந்த தொடரிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. கடைசி இரண்டு ஆட்டங்களிலும் விஸ்வரூபமெடுத்த முகமது லியாகத், பெங்களூரு ரூட்ஸ் கால்பந்து பள்ளி, கொல்கத்தா அணிகளை பதம் பார்க்க அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் நடந்த மோகன்ராஜ் நினைவு யு-16 கோப்பையை வென்று கொடுத்தார். ஹீரோ யு- 13 தொடரின் சென்னை மண்டலத்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் கிடைத்தது.சென்னை எப்சி கிளப், லீக் ஆட்டங்கள், ஈரோடு மாவட்ட அணி என எப்போதும் பிசியோபிசியாக இருக்கிறார். இந்திய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். அதற்காகவே இரவு-பகல் பாராமல் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்து நாட்டிற்காக சாதித்துக் காட்டுவேன் என்று கூறும் அவருடைய லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.