tamilnadu

img

ஏற்றுமதியை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள்

நாடுகள் பின்பற்றும் உள்நாட்டு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொருள்களின் விலையில் ஸ்திரமற்ற நிலை, வங்கிக் கடன் கிடைப்பதில் சிரமம் ஆகியவை ஏற்றுமதியை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்று இந்திய ஏற்றுமதி கவுன்சிலின் (எப்ஐஇஓ) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஏற்றுமதி கவுன்சிலின் (எப்ஐஇஓ) இயக்குநர் கூறுகையில்: ”கடந்த 2018-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டில் சர்வதேச அளவில் வர்த்தகம் பெருமளவு குறையும் என உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) சுட்டிக் காட்டியுள்ளது. நாடுகள் தங்கள் நாட்டு தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பொருட்களுக்கான தேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உள்நாட்டிலேயே இரண்டு விதமான சவால்களை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொருட்களின் விலையில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. அதேபோல ஏற்றுமதியாளர்களுக்கு உரிய காலத்தில் கடன் கிடைப்பதில்லை. இந்த மூன்றுமே இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெருமளவில் பாதிக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசுதான் உதவ வேண்டும்.

வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையில் ஆன்லைன் முறையிலான வழியை பின்பற்றினால் கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த ஆண்டு சர்வதேச அளவிலான வர்த்தகம் 3.7 சதவீதமாக இருக்கும் என டபிள்யூடிஓ முன்னர் கணித்திருந்தது. ஆனால் திருத்திய மதிப்பீட்டின்படி வர்த்தகம் 2.6 சதவீதமாக சரியும் என குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டின் ஏற்றுமதி 2018-19-ல் 33,000 கோடி டாலராக இருக்கும் என்றார். நாட்டின் ஏற்றுமதி (ஏப்ரல் முதல் பிப்ரவரி) 8.85 சதவீதமாக உள்ளது. இது அமெரிக்க மதிப்பில் 29,847 கோடி டாலராகும்.அதேசமயம் இறக்குமதி 9.75 சதவீதமாக அதிகரித்துள்ளதால் பற்றாக்குறையும் அதிகரிக்கும் என தெரிகிறது” என்றார்.


;