tamilnadu

img

கள்ளநோட்டு அச்சிடும் குஜராத் மாநில இளைஞர்கள்

3 ஆண்டு கால பணமதிப்பு நீக்கத் துயரம் ஏற்படுத்திய தாக்கம்

சூரத், நவ. 8 - இந்தியாவில் ரொக்கப் புழக்கத்தில் 86 சதவிகிதமாக இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை, பிரதமர் நரேந்திர  மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ஒரே இரவில் செல்லாமல் ஆக்கினார். கறுப்புப் பணம், கள்ளப்பணம், ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்ப தற்குமே இந்த பணமதிப்பு நீக்கம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 50 நாட்கள்  மட்டும் எனக்கு அவகாசம் தாருங்கள்; அதற்குள் தான் சொன்னது நடக்காவிட்டால், பொதுமக்கள் என்னை தீயிட்டு கொளுத்த லாம் என்றும் சவால் விட்டார். ஆனால், அவர் சொன்ன எதுவுமே நடக்கவில்லை. கறுப்புப்பணம் மீட்கப்படவில்லை. ரொக்கப் புழக்கம் 2016-இல் இருந்ததை விட 2 மடங்கு அதிகரித்து விட்டது. ஊழல், தீவிர வாதம் எதுவும் குறையவில்லை. இதில்  முக்கியமானது கள்ளநோட்டுப் பிரச்சனை யாகும்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் கள்ள நோட்டு அச்சிடுவதும் பிடிபடுவதும் முன்பை விட அதிகரித்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கியே கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டது. 2017-18ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 892 என்ற எண்ணிக்கையிலேயே புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டன. 2018-19இல் இது 21 ஆயிரத்து 865 என்ற எண்ணிக்கைக்கு 121 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல, 2017-18 நிதியாண்டில், 17 ஆயிரத்து 929 என்ற அளவில் பிடிபட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களின் எண்ணிக்கை, தற்போது, 21 ஆயிரத்து 847 நோட்டுக்கள் என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது. இது 2017-18ஆம் ஆண்டு பிடிபட்ட 2000 கள்ள நோட்டுகள் அளவைவிட 21.9 சதவிகிதம் அதிகம். பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில், ரூ. 15 கோடியே 48 லட்சம் அளவிற்கே கள்ளநோட்டுக்கள் பிடிபட்டிருந்த நிலையில், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 28 கோடியே  10 லட்சம் அளவிற்கான கள்ள நோட்டுக்களும், 2018-ஆம் ஆண்டு ரூ. 17 கோடியே 75 லட்சம் அளவிற்கான கள்ள நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், மோடியின் சொந்த மாநிலம் என்பதுடன்- சுமார் 20 ஆண்டு களுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம் இன்று கள்ளநோட்டுக்களின் சொர்க்கமாக மாறியிருக்கிறது என்பதுதான். இங்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் வேலைவாய்ப்பை இழந்த பலரும் கள்ள நோட்டு அச்சிடுவதில் இறங்கிவிட்டனர். வதோதராவில் கடந்த வாரம் அபிஷேக் சுர்வே, சுமித் நம்பியார் ஆகிய 2 இளை ஞர்கள், 500 ரூபாய் கள்ளநோட்டைக் கொண்டு, பொருட்களை வாங்க முயன்ற போது, போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் கைகாட்டியதன் அடிப்படையில், சூரத் நகரைச்  சேர்ந்த அபிஷேக் மங்குகியா, சஞ்சய் பார்மர், ஆசிஷ் சுரானி, குல்துர்ப் ராவல், விஷால் சுரானி உள்ளிட்டவர்களும் கைது செய்யப் பட்டு, அவர்களிடமிருந்து கள்ள நோட்டுக் களும், கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரங் களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு பிடிபட்ட அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவார்.  அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை யில், அனைவரும் சூரத்தின் பிரபல தொழி லான வைரம் பட்டைத் தீட்டும் தொழிற்சாலை களில் பணியாற்றி வந்ததும், மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால், வேலைவாய்ப்பை இழந்து, பிழைப்பிற்காக கள்ளநோட்டு அச்சிடுவதில் இறங்கியதும் தெரியவந்தது. கைதானவர்களில் சஞ்சய் மட்டுமே 10-ஆம் வகுப்பு முடித்தவர். மற்றவர்கள் எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். வேறு தொழில் எதுவும் தெரியாத நிலையில், யூடியூப் வீடியோ மூலமாக கள்ளநோட்டு அச்சிடுவது எவ்வாறு என்பதை அறிந்து கொண்டு, அத்தொழிலில் இறங்கியுள்ளனர். இதே கதைதான் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கம்மத்திலும் கூட சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு கள்ளநோட்டுக்கள் பிடிபட்டதும், அவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.