முதல்வர் தலையிட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சென்னை, ஜன.10- 2018 ஆம் ஆண்டு முதல் புதிதாக விண்ணப்பித்த சுமார் 18,000 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.1500 உதவித் தொகை ஓராண்டுக்கு மேலாகியும் வழங்காமல் உள்ள உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், தொழுநோய் பாதித்தோர், தசைச்சிதைவு பாதித்தோர், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதித்த கடும் ஊனமுற்றோருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1500 மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மற்றும் செப்டம்பர் மாத இறுதிவரை புதிதாக விண்ணப்பிக் கும் இந்த வகை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையே ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருந்து உதவித்தொகை கணக்கிட்டு வழங்கப்படும். ஆனால், 2018 அக்டோபர் முதல் மாநிலம் முழுவதும் இருந்து விண்ணப்பித்த சுமார் 18,000 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்ட கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை.
நிதித்துறையிலிருந்து நிதி வழங்காததே காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், இவ்வகை மாற்றுத்திறனாளிகளும், அவர்கள் குடும்பத்தின ரும் கடும் ஏமாற்றத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே, இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டுள்ள கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, விண்ணப்பித்த காலத்திலிருந்து முன்தேதியிட்டு உதவித்தொகையை கணக்கிட்டு வழங்கவும் முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.