tamilnadu

img

நியூசிலாந்திடமிருந்து பேரன்பைக் கற்றுக் கொள்வோம்

 

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை தொழுகைகளை நடத்திய போது, " எங்கள் மனம் உடைந்து போனது என்றாலும் நாங்கள் உடைந்து போகவில்லை" என்று இமாம் கமால் ஃபௌடா அறிவித்தார். "நாங்கள் உயிரோடு இருக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம், எங்களை யாராலும் பிரித்து விட முடியாதவாறு உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

இருண்ட காலங்களில்கூட ஒருமைப்பாடு மற்றும் பேரன்பின் மூலமாக எதனையும் சாதிக்க முடியும் என்பதை மதவெறி, வெறுப்பு ஆகியவற்றால் பிளவுபட்டிருக்கும் இந்த உலகத்திற்கு, இந்த துயரமான தருணத்தில் நியூசிலாந்து மக்கள் காட்டியிருக்கின்றனர். ரத்தம் தோய்ந்த தேசப்பிரிவினைக்குப் பிறகு முன்னெப்போதும் கண்டிராத வகையில் துயரத்துடன் இன்றைக்குப் பிரிந்து கிடக்கின்ற இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இது இருக்கிறது. நாம் கவனத்தில் கொள்வோமா?


வெளியான ஒருமைப்பாடு


நியூசிலாந்து முழுவதும் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னதாக, அனைத்து இடங்களிலும் பாங்கு ஓதப்பட்டது. தொழுகைக்கு வந்தவர்களை அந்த தீவிரவாதி படுகொலை செய்த மசூதிகளுக்கு வெளியேயும், நாடு முழுவதிலும் உள்ள பிற மசூதிகளிலும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளை இணைத்துக் கொண்டு தொழுகை நடத்த வந்திருந்த முஸ்லீம் சகோதரர்கள், சகோதரிகளைச் சுற்றி சுவர் போல நின்று கொண்டனர். பல பெண்கள் ஹிஜாப் அணிந்திருந்தார்கள்.

கருப்பு வண்ணத் துப்பாட்டாவைக் கொண்டு தனது தலையை மறைத்துக் கொண்டு நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் அந்தப் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்களை மேற்கோளிட்டு, “நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கொருவரிடையே பரஸ்பர இரக்கம், பரிவு, கருணை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பவர்கள் தங்களை ஓர் உடலாகவே கருதுகின்றனர். அந்த உடலில் எந்தவொரு பகுதி பாதிக்கப்படும் போதும், வலியை முழு உடலுமே உணர்கிறது" என்று அவர் கூறினார். மேலும் "உங்கள் துயரங்களை நியூசிலாந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. நாம் அனைவரும் ஒருவராகவே இருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.


இதற்கு முன்னதாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்த வேளையிலும் ஆர்டென் தன்னுடைய தலையை ஒரு கருப்பு துப்பட்டாவால் மறைத்துக் கொண்டுதான் சென்றிருந்தார். பாதிக்கப்பட்டவர்களைத் தழுவிக்கொண்ட போது, அவர்களுடைய வலியை ஆர்டெனின் முகம் பிரதிபலித்தது. தாங்கள் நேசித்து வந்தவர்களை துப்பாக்கிச் சூட்டில் இழந்து நின்றவர்களின் துயரங்களை அவர் முழுமையாகப் பகிர்ந்து கொண்டதை அவரது முகம் தெளிவாகக் காட்டியது.

இதற்கு மாறாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் நடந்திருப்பவை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல மிருகத்தனமான தாக்குதல்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டு மிகப் பரந்த அளவில் சமூக ஊடகங்களில் சுற்றுக்கு விடப்பட்டன. தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் நடத்தப்படுகின்ற இத்தகைய வெறுப்புத் தாக்குதல்கள் நாடு முழுவதிலும் இருக்கின்ற முஸ்லீம்களின் மத்தியில் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒருமுறைகூட பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்ததே இல்லை. பொது மேடைகள் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய அனுதாபத்தை அவர் ஒருபோதும் தெரிவித்ததே இல்லை. காஷ்மீரில் புல்வாமாவில் 40 மத்திய துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவின் பல பகுதிகளிலும் காஷ்மீரத்து மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, மோடி மக்களின் இதயத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு தன்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருப்பதாகவே அறிவித்தார். அவரது பேச்சு பழிவாங்கலை ஊக்குவிக்கின்ற வகையிலான தெளிவான செய்தியாக மட்டுமே இருந்தது.


இந்தியாவின் மக்கள் தொகையில் 14% முஸ்லீம்கள் இருக்கின்றனர். ஆனால் நியூசிலாந்திலோ அவர்கள் 1%க்கு சற்று அதிகமான அளவில் மட்டுமே இருக்கின்றனர். அவர்களில் பலரும் குடியேறியவர்களாகவோ அல்லது அகதிகளாக வந்து சேர்ந்தவர்களாகவோ இருப்பதை அறிந்தவராக இருக்கும் ஆர்டென் "அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள்தான் ... குற்றம் புரிந்தவர் அப்படி அல்ல" என்று கூறினார். ஆர்டெனின் இந்த கூற்று மோடியின் கனத்த மௌனங்களோடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டின் அங்கமாக இருந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லீம்களை ’அவர்கள் இந்த நாட்டினர் அல்ல’ என்றும் வன்முறையை நிகழ்த்துபவர்களை இந்தியர்கள் என்றும் நம்புகிற ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சித்தாந்தத்தில் வேரூன்றியவராக மட்டுமே மோடி இருக்கிறார்.


கடந்த பல மாதங்களில் நாட்டின் 15 மாநிலங்களில் கர்வான்-இ-மொஹபத் எனும் பெயரில் நேசத்திற்கான ஊர்வலத்தை 27 பயணங்களாக நாங்கள் மேற்கொண்டோம். தாங்கள் நேசித்து வந்தவர்களை வெறுப்பு மற்றும் வன்முறைகளின் விளைவாக இழந்திருப்பவர்களின் குடும்பங்களை இந்தப் பயணங்களின் போது நாங்கள் அவர்களுடைய வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சந்தித்திருக்கின்றோம். துயரத்தில் இருக்கின்ற இந்தக் குடும்பங்களை நேரடியாகச் சந்திப்பது என்ற எங்களுடைய இந்த எளிய செயலின் மூலமாக நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாய் கற்றுக் கொண்டோம். தங்களுடைய நேசத்துக்குரியவர்களைத் தாக்குகின்ற அண்டை வீட்டார் அல்லது அன்னியர்கள் காட்டுகின்ற வெறுப்பின் மூலம் தங்கள் மீது தொடுக்கப்படுகின்ற போரில் தோற்கும் போது தாங்கள் கைவிடப்பட்டு தனித்திருப்பதாகவே அவர்கள் உணர்கிறார்கள். அவர்களைத் தழுவிக் கொண்டு, அவர்களுடைய கைகளை இறுகப் பற்றிக் கொள்ளும் போது அவர்கள் அழுவதைப் பார்க்கின்ற நம்முடைய கண்களும் ஈரமாகி விடுகின்றன. நாங்கள்தான் அவர்களை வந்து நேரில் சந்திக்கின்ற முதல் நபர்களாக இருப்பதாக தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் சொல்கின்றன.

கிறிஸ்ட்சர்ச்சில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ஆர்டெனும் இவ்வாறே நடந்து கொண்டார். இதனையே நமது பிரதமர் மற்றும் மதச்சார்பற்ற அரசியலுக்கு ஆதரவாக நிற்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றே நான் எப்போதும் விரும்புகிறேன். ஆனால் இத்தகைய போரைத் தனித்து எதிர்கொண்டு நின்று பாதிப்படைந்திருப்பவர்களை இவர்களில் எவருமே சந்திக்காததன் மூலம். தங்களிடம் தன்னிச்சையான பரிவோ அல்லது அரசியல் தைரியமோ இருக்கவில்லை என்பதையே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

தலையில் அணிகின்ற குல்லாய் போன்றவற்றுடன் தொடர்புடைய விஷயத்தை அடுத்து எடுத்துக் கொள்ளலாம். நடைமுறைப் பழக்கத்திற்கான அங்கீகாரமாக இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செலுத்துகின்ற வகையில் ஆர்டென் தன்னுடைய தலையை ஒரு துப்பட்டா கொண்டு மூடிமறைத்துக் கொண்டு அங்கே வந்திருந்தார். பிரதமரின் இந்தச் செய்கையால் ஈர்க்கப்பட்ட செய்தித் தொகுப்பாளர்கள், காவல்துறையினர், சாதாரண மக்கள் என்று நியூசிலாந்து முழுவதிலும் இருந்த பெண்கள் ஹிஜாப் ஸ்கார்ஃப் கொண்டு தங்களுடைய தலையை மறைத்துக் கொண்டனர். இமாம் ஃபௌடா "மிக எளிய ஸ்கார்ஃப் துணியைக் கொண்டு எங்களுக்கு மரியாதை செய்து எங்கள் குடும்பங்களுடன் நெருங்கி வந்தமைக்கு நன்றி" என்று ஆர்டெனிடம் கூறினார். இதற்கு முற்றிலும் மாறாக, இந்தியா முழுவதும் விதவிதமான தலைசிறந்த குல்லாய்களை அணிந்து தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்ற மோடி, முஸ்லீம்கள் அணிகின்ற அந்தக் குல்லாயை மட்டும் அணிய மறுத்து வருகின்றார்.

கொலையாளியின் வெறுப்பு பிரச்சாரமோ அல்லது அந்தக் கொலையாளியால் நேரலையில் வெளியிடப்பட்ட வீடியோவோ பரவி விடாதவாறு உறுதியான நடவடிக்கைகளை ஆர்டென் மேற்கொண்டார், மேலும் பகிரங்கமாக அந்தக் கொலையாளியின் பெயரை ஒருபோதும் தான் அறிவிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார். இதற்கு நேர்மாறாக, இந்தியாவிலோ குற்றம் செய்கிறவர்கள் வன்முறையை, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும்வகையில் இருக்கின்ற வீடியோக்களை சுதந்திரமாகப் பதிவேற்றம் செய்து வினியோகித்து வருகிறார்கள். வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்கள் அவர்களாலும், ஆளும் அதிகாரத்தைச் சார்ந்திருக்கின்ற பல முன்னணி உறுப்பினர்களாலும் மிக விரைவாகப் பரப்பப்படுகின்றன. வெறுப்பூட்டும் படுகொலைகளைச் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாலைகள், தேசிய கொடி போன்றவற்றை அணிவித்து மத்திய அமைச்சர்கள் கொண்டாடுகிறார்கள்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய உலகில் உள்ள கிறிஸ்துவ மற்றும் யூத மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்கள் தங்களுடைய ஒருமைப்பாட்டை முஸ்லீம் சமூகத்திற்கு தெரிவிக்கும் வகையில் மசூதிகளில் நடந்த கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். கோல்ட்கோஸ்டில் உள்ள நியூ லைஃப் தேவாலயத்தின் அமைச்சரான ஸ்டூ கேமரூன் கூறுகையில், " ஒருவர் அழும் போது நல்ல மனிதர்களும் உடன் அழுவர். உடன் இருப்பவர்கள் அச்சுறுத்தப்படுகையில் ஒற்றுமையுடன் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து நிற்பர்" என்றார். உயிர் தப்பிய குடும்பங்களுக்கு நியூசிலாந்தில் இருந்த சீக்கிய குருத்வாராக்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆனால் மிருகத்தனமான வெறுப்புத் தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கும் போது, மதத் தலைவர்கள் எவரும் இதுபோன்று எந்த வகையிலும் நடந்து கொள்வதில்லை.


கருணை அற்றுப் போனது


இருந்த போதிலும், இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்ற உள்ளூர் சமூகங்களுக்குள் ஆழ்ந்த பரிவும், கருணையும் இல்லாமல் இருக்கின்ற தன்மையானது, வன்முறைகளை எதிர்த்துப் போராடாத அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் போக்குகளைவிட விடவும் வருத்தம் தருவதாக இருக்கின்றது. தாங்கள் வாழுகின்ற நாட்டை இனிமேலும் தங்களுடைய சொந்த நாடாக உணர முடியாது அச்சத்தில் உறைந்து போயிருக்கும் மக்களிடம் பச்சாதாபத்தை எதிர்பார்க்க முடியாது. உடன் வசித்து வருபவர்களால் நடத்தப்படுகின்ற வெறுப்புத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற மதங்கள் மற்றும் சாதிகளைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆதரவு அளித்ததாக எங்களுடைய பயணத்தின் போது எந்தவொரு தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. குருகிராமில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துகின்ற இடங்களின் எண்ணிக்கையை பத்தில் ஒரு பங்காக குறைத்து முஸ்லீம்களைக் கொடுமைப்படுத்துவதில் அரசு நிர்வாகத்தால் ஆதரிக்கப்படுகின்ற கும்பல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. நம்மிடமிருக்கின்ற கருணை வெளிப்படுவதைக் கட்டுப்படுத்துகின்ற அளவிற்கு இத்தகைய வெறுப்புகளை அனுமதித்திருப்பது என்பது மனித நாகரிகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாகவே தோன்றுகின்றது.

நியூசிலாந்தில் இமாம் ஃபௌடா கூறுகையில், "எங்கள் மனம் உடைந்து போனது என்றாலும் நாங்கள் உடைந்து போகவில்லை." என்றார். ஆனாலும் நம்முடைய நாட்டைச் சுற்றிப் பீடித்துள்ள வெறுப்பினால் நம் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நமது நாகரிகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது தெரிந்தாலும், நாம் மனம் உடைந்து போகவில்லை. உண்மையாகப் பார்த்தால் நம்மில் சிலர் அந்த தாக்குதல்களுக்கான ஒப்புதலை வழங்கி அவற்றைக் கொண்டாடுகிறோம். மக்களாக நாம் உடைந்து போய் விட்டோம்.


நன்றி:https://www.thehindu.com/opinion/op-ed/learning-love-from-new-zealand/article26636372.ece   

ஹர்ஷ் மந்தர்,( மனித உரிமைகளுக்கான களப் பணியாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்)

தி ஹிந்து,

தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு விருதுநகர்


;