tamilnadu

img

சிற்றலை வானொலிகளின் ஒருங்கிணைப்பு- அருண்குமார் நரசிம்மன்

நம்மில் பலர் பண்பலை வானொலியோ அல்லது சிற்றலை வானொலியோ கேட்கும் பழக்கம் உள்ளவராக இருப்போம் ஆனால் பலருக்கு இந்த வானொலிகளுக்கு அதிர்வெண் (Frequency) எப்படி யாரால் அளிக்கப்படுகிறது என்பது தெரிந்திருக்காது இந்த கட்டுரை அதைப்பற்றியது தான். இந்தியாவில் பண்பலை வானொலிகளுக்கு அதிர்வெண் (Frequency) வழங்குவது மத்திய அரசு தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு (WPC) துறையாகும். இந்த துறை பண்பலை வானொலிகளுக்கு மட்டுமல்லாது செல்பேசி நிறுவனங்களுக்கும் அதிர்வெண் வழங்கி வருகிறது. இது ஒரு புறம் இருக்க உலகெங்கும் உள்ள சிற்றலை வானொலிகளுக்கு அதிர்வெண்களை உயர் அதிர்வெண் ஒருங்கிணைப்புக் குழு (HFCC) என்ற ஒரு அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் பிரிவில் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) துறை உறுப்பினராக உள்ளது. இது ஐ.டி.யுவின் சர்வதேச வானொலி விதிமுறைகளுக்கு இணங்க சர்வதேச சிற்றலை ஒலிபரப்பின் உலகளாவிய தரவுத்தளங்களை நிர்வகிக்கிறது மற்றும் ஒருங்கிணைக்கிறது. சிற்றலை ஒலிபரப்பில் பயன்படுத்தப்படும் அதிர்வெண்களை HFCC ஒருங்கிணைக்கிறது. 1990ஆம் ஆண்டில் ஒளிபரப்பாளர்களும், சிற்றலை வானொலிகளின் சில நிர்வாகங்களின் பிரதிநிதிகளும், பல்கேரியாவின் பாம்போரோவோ நகரில் முதல்முறையாக ஒத்துழைப்பை நல்கும் நோக்கத்துடன் சந்தித்தபோது இந்த ஒருங்கிணைப்பு துவங்கியது. சிற்றலை வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து  அணைத்து நாடுகளும் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையில் அதிர்வெண்களை ஒதுக்கக்கூடிய எந்த ஒரு வழிவகையும்  உருவாக்கப்படவில்லை. சிற்றலை வானொலி நிலையங்களிடையே பரஸ்பரமான ஏற்றுக்கொள்ள கூடிய நிலை இல்லாததும் பனிப்போர் முடிவடைந்த நிலை ஆகியவை உலகளாவிய சிற்றலை வானொலிகளுக்கு அதிர்வெண் ஒருங்கிணைப்பின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. துல்லியமான அதிர்வெண் மற்றும் சிற்றலை வானொலிகளின் அட்டவணைத் தகவல்களுக்கு கேட்பவர்களுக்கு இலவச HFCC வழங்கிவருகிறது. சிற்றலை வானொலிகள் கேட்பதை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிப்பதில் HFCCயின் பங்கு மிகப்பெரியதாகும். அங்கீகரிக்கப்பட்ட சிற்றலை ஒளிபரப்பாளர்களுக்கு அதிர்வெண் மேலாண்மை மற்றும் திட்டமிடலை வழங்கும் அனைத்து தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் HFCC இன் உறுப்பினராக இருக்கலாம். சிற்றலை வானொலிகளின் அதிர்வெண்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கேற்ப மாற்றியமைக்க HFCC வழிவகுக்கிறது. உதாரணத்திற்கு 15350 என்ற அதிர்வெணில் (பிரெயூனிசி) ஒரு குறிப்பிட்ட வானொலி 6 மாதத்திற்கு முன்பு ஒலிபரப்பி வந்திருந்தால் அடுத்த 6 மாதத்திற்கு வேறு ஏதேனும் அதிர்வெணில் ஒலிபரப்ப தங்கள் வேண்டுகோளினை அளிக்கலாம், அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு தங்கள் அதிர்வெண்ணை மாற்றிக்கொள்ளலாம். HFCCயில் உறுப்பினராக உள்ள அனைத்து வானொலி நிலையங்களின் பிரதிநிதிகள் வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நாட்டில் சந்தித்து  தங்கள் அதிர்வெண் ஒதுக்குதல் குறித்து விவாதிப்பார்கள். இந்த நடைமுறை பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது, எதிர்வரும் காலங்களிலும் இந்த முறைதான் பின்பற்றப்படும் என்று நாம் நம்புகிறோம். HFCC குறித்த மேலும் தகவல் அறிந்துகொள்ள www.hfcc.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.