ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அருகே ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் பதற்றமான நிலை காணப்படுகின்றது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, கடந்த 3-ஆம் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்களை தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது.
அதே சமயம் ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. ஈராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கப் படைகள், ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர்.
இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், ஞாயிற்றுக்கிழமை 5 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.