tamilnadu

img

பக‘வ’ன் அல்ல பக‘ல’ன் - நீதியரசர் ஏ.கே. ராஜன்

“அகர முதல எழுத்தெல்லாம்                     ஆதி 
பகவன் முதற்றே உலகு”.  
 

என்ற முதற் குறளின் இரண்டாம் அடியில் முதற் சொல்லான பகவன் என்ற சொல்லை படிக்கும்போதே தமிழ் ஒலி இடறுவது கண்கூடு.  தவிர பகவன் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லும் அல்லாத தமிழ் ஒலியும் அல்லாத அச்சொல்லை குறளா சிரியர் எழுதி இருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. ஆயினும், மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் முதலான உரையா சிரியர்கள் அனைவருமே பகவன் என்பது பகவான் என்ற சமஸ்கிருதச் சொல்லின் குறுக்கம் என்றே பொருள் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பகவான் என்பது கடவுளை குறிக்கும் வடமொழிச்சொல் என்பதால் ஆதி பகவன் என்பதற்கு 'முதல் கடவுள்' எனப் பொருள் கண்டனர். பிற்காலத்து உரையாசிரியர்கள் சிலர் ஆதி என்பது நூலாசிரியரின் தாயின் பெயர் என்றும் பகவன் என்பது தந்தையின் பெயர் என்றும் பொருள் கண்டனர்.  தொடர்ந்து ஆதி என்பது தாழ் குலத்தினரின் பெயர் என்றும் எனவே திருவள்ளுவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூட பொருள் கண்டனர்.  பகவன் என்ற சொல்லின் மீது வெகு சிலரே ஐயம் கொண்டனர். மக்களிடையே வழக்கில் இருக்கும் வடிவில் குறை சொல்ல விருப்பம் இன்மையால் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆயினும் பகவன் என்ற சொல்லில் ஏதோ பிழை உள்ளது என்பதை உணர்ந்தே இருந்தனர். 

இந்த ஐயத்தைப் போக்கி சரியான சொல்லைத் தெரிந்திட தமிழ்  கல்வெட்டுகளின் துணையை நாடலாம். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்துள்ளன. பல கல்வெட்டுகளில் உள்ள 'ல' என்ற எழுத்தின் வரிவடிவம் 'வ' என பதிக்கப்பட்டுள்ளதைக் காண இயலும்.  திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படும் கல்வெட்டினைக் குறித்த செய்தியை வெளிக்கொணர்ந்த 'வசந்த்' தொலைக்காட்சி, அதனை வல்லுனர்கள் மூலம் விளக்கம் பெற்று ஒளிபரப்பினர். அவ்வாறு விளக்கம் சொன்ன வல்லுநர் ‘பவ்வவன்’ என்று வரிவடிவத்தில் காணப்பட்ட கல்வெட்டினை, ‘பல்லவன்’ என்றே வாசித்தார். எனவே முதற் குறளின் இரண்டாம் அடியில் முதற்சொல் பகவன் அல்ல என்றும் அது பகலன் என்றே இருந்திருக்கும் என்றும் முடிவு செய்யலாம். அப்போது அது தமிழ்ச் சொல்லாகவும் தமிழ் ஒலியாகவும் மாறுவதையும் அறியலாம். அவ்வாறு கொள்ளும்போது “ பகலன் முதற்றே உலகு” என்றே முடியும்.  ‘பகலன்’ என்ற சொல்லும் தமிழில் இல்லை என்றும் சூரியனை குறிக்கும் சொல் ‘பகலவன்’ என்றே தமிழில் உள்ளது என்றும் அறிஞர்கள் கூறுவர்.  ஓசை நயத்திற்கு ஏற்ப குறிலை நெடிலாகவும், அள பெடையுடனும், குறுக்கியும் எழுதுவது புலவர்களுக்கு இயைந்த ஒன்றே என்பதையும் மனதிற் கொண்டு இதனை ஆராயலாம். பகலவன் என்ற சொல் ஞாயிறைக் குறிக்கும் எனும்போது ஓசை நயத்திற்காகவும் எதுகை மோனைக்காகவும் பகலவன் என்ற சொல் குறுக்கஞ் செய்யப்பட்டு பகலன் என எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் துணிந்து கூறலாம். ஞாயிறு போற்றுதும் என சிலப்பதிகாரத்தில் உள்ளதையும் அது போன்று பல இலக்கியங்கள் சூரியனை வாழ்த்திப் பாடியுள்ளதையும் காணலாம்.  எனவே முதலில் குறளாசிரியர் ஞாயிறு அல்லது சூரியனையே குறித்தும் பாடியுள்ளார்  என்பதே பொருத்தமாக இருக்கும்.

திருக்குறள் வெண்பா வகையைச் சேர்ந்தது. பகலவன் என்ற சொல்லுக்கும் பகலன் என்ற சொல்லுக்கும் சீர்கள் மாறுபடும்.  பகலன் என இருந்தால் அது வெண்பா இலக்கணத்தில் அமையும் என்பதும் சீர்களும் தளையும் எதுகை யுடனும் ஒத்துப் போகும் என்பதும் தமிழ் அறிஞர்களின் கருத்தாகும். எனவே திருவள்ளுவர் அக்குறளில் பகலன் என்று சூரியனைக் குறித்தே பாடி இருப்பார் எனக்கொள்ளலாம். உயிரினங்கள் வாழ்வதற்கும் இப்பூவுலகம் இயங்குவதற்கும் சூரியனே மூல காரணம் என்பதால், அகரம் முதலே எழுத்துக்கள்; அதுபோன்று பகலன் (சூரியன்) முதற்றே உலகு என்ற கருத்திலேயே இயற்றப்பட்டிருக்கும் என முடிவு செய்வதில் பிழையேதும் இல்லை. மேலும் தமிழ் ஒலி அல்லாத பகவன் என்ற சொல்லையே எழுதியிருப்பார் என வாதிக்க இயலாது. ஏனெனில் தற்போதுள்ள வரிவடிவத்தில்  மூல நூல் எழுதப்படவில்லை என்பதற்கும் மூலநூல் பலரால் பல்வேறு காலகட்டங்களில் படியெடுக்குங்கால் சில பிழைகள் ஏற்பட்டிருக்கும் என்பதற்கும் பெரிதும் வாய்ப்புள்ளது. மேலும் சிலர் தமிழ் லெக்சிகனில் பகவன் என்ற சொல் காணப்படுகிறது என்றும் எனவே அதுவும் தமிழ்ச் சொல்லே என்றும் வாதிடலாம். தமிழ் லெக்சிகன் 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நூல்.

அப்போது 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணக்குடவர் உரையும் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரிமேலழகர் உரையும் வெளிவந்து விட்ட நிலையில் தமிழ் லெக்சிகனில் அச்சொல் இடம்பெற்றிருக்கலாம். இருப்பினும் பகவன் என்ற சொல்லின் ஒலி தமிழ் ஒலி அல்ல என்பதை எவரும் மறுக்க இயலாது. தமிழ் லெக்சிகனில் பகவன் என்ற சொல்லுக்கு இறைவன், சிவன், திருமால், பிரம்மன் இவற்றோடு சூரியன் என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது. எனவே தமிழ் ஓசை உடைய பகலன் என்ற சொல்லையே நூலாசிரியர் எழுதி இருப்பார் எனக் கொள்வதே சரியாகும். எனவே திருக்குறளின் முதல் குறளினை 

“அகர முதல எழுத்தெல்லாம்                     ஆதி 
பக‘ல’ன் முதற்றே உலகு”
என்றே கொள்ளலாம்.