tamilnadu

img

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளே சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

பிரிட்டன் பயணத்தின்போது, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணம். சீனா, இந்தியா, ரஷ்யா உள்பட பல நாடுகளில் நல்ல காற்று மற்றும் தண்ணீர் இல்லை. அவர்களுக்கு மாசுபாடு குறித்த உணர்வும் இல்லை. சில நகரங்களுக்கு சென்றால், மூச்சு கூட விட முடியாது. அவர்களின்  பொறுப்பை அவர்கள் செய்யவில்லை என கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப், கடந்த 2017-ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க தொழில் நலனுக்கு எதிரானது என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பலவும் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் வெளியேற்றிய கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களே பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வளரும் நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறி வருகின்றன.