states

img

பீமா கொரேகான்  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்திடுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பீமா கொரேகான் வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பீமா கொரேகான் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்துவிட்டு, அதில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மேலும் இவ்வழக்குகளுக்கான சாட்சியம் எப்படி ரோனா வில்சன் என்னும் செயற்பாட்டாளர்களில் ஒருவருடைய கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக சர்வதேச வல்லுநர்களின் நம்பகமான அறிக்கைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பது தொடர்பாக விசாரணை செய்திட மகாராஷ்ட்ர மாநில அரசாங்கம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

அமெரிக்காவில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்று, அவருடைய கணினிக்குள் கள்ளத்தனமான முறையில்  தீய மென்பொருள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன்மூலம் அவர் எந்தக்காலத்திலுமே பார்க்காத பல கோப்புகள் அவருடைய கணினிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்று கண்டறிந்திருக்கிறது. இதனை இதர வல்லுநர்களும் சரிபார்த்திருக்கிறார்கள்.

மேலும், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே, அவருடைய கணினியில் அவர் அறியாமலேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு மின்னஞ்சல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு முகமை, இவ்வழக்கின் ‘சதித்திட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்த மின்னஞ்சல்களைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றன.

குற்றச்சாட்டுகளுடன் இணைக்கும் விதத்தில் மின்னஞ்சல்களைப் பதிவேற்றம் செய்வது, மிகவும் கொடூரமான தொழில்நுட்ப ஆயுதமாகும். இதனை மோடி அரசாங்கம் பீமா கொரோகான் வழக்கில் பயன்படுத்தி இருக்கிறது. எதிர்காலத்தில் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இதேபோன்று அது பயன்படுத்தலாம். இவ்வாறு இவ்வழக்கு தொடர்பாக வெளிச்சத்திற்கு வந்திருக்கும் உண்மைகளை மூடிமறைத்திட அனுமதிக்கப்படக்கூடாது அல்லது இது தொடர்பாக அதிகாரிகளின் ஆரம்பப் பிரதிபலிப்பு சுட்டிக்காட்டுவதுபோல் இதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடாது. இது அவசியமாகும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

;