states

யுபிஐ கிரெடிட் லைன்!

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை(மானிட்டரி பாலிசி) ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறி விப்பில், யுபிஐ (UPI) அடிப்படையிலான ‘ப்ரி-சேங்ஷன்ட் கிரெடிட் லைன்’ என்பதை முன்மொழிந்திருக்கிறது. அதாவது, இதுவரை வங்கிக் கணக்கில் அல்லது ‘வாலட்’டில் நாம் வைத்திருக்கிற பணத்தைத்தான் ஜிபே, ஃபோன்பே போன்ற யுபிஐ செயலிகள்மூலம் பயன்படுத்தி வந்தோம். கிரெடிட் கார்டிலிருந்து யுபிஐ பேமெண்டைச் செய்ய முடியாது. அண்மையில், ரூபே கார்டுகளை யுபிஐ மூலம் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி (RBI) வழங்கியிருந்தது.  ரூபே என்பது விசா, மாஸ்டர்கார்டு போன்ற பன்னாட்டு நிதிச் சேவை அமைப்புகளைப் போன்று, இந்தியாவில் ரிசர்வ் வங்கி, என்சிபிஐ (NCPI) முன்னெடுப்பில் உருவாக்கப் பட்டது ரூபே. 2007இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு(IBA) ஆகியவை கூட்டாக, 2008இல் உருவாக்கியதுதான் என்சிபிஐ என்ற நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. இதனுடைய எட்டாண்டு முயற்சியில்தான் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ் என்ற யுபிஐ UPI உருவாக் கப்பட்டு 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கவனி யுங்கள், முயற்சி தொடங்கியது 2007, செயல்பாட்டுக்கு வந்தது 2016 - எங்கள் சாதனை என்று ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது!)

வேறு வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடையே நடக்கும் பணப்பரிமாற் றத்தை எளிமையும், விரைவும் படுத்துதல், வாடிக்கையாள ருக்கும், வணிக நிறுவனங்களுக்குமான பரிமாற்றங்களு க்கு உதவுதல் ஆகிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த யுபிஐ இன்று உலகின் மிகச்சிறந்த சில்லரைப் பணப் பரிமாற்ற செயல்முறையாக விளங்குகிறது. தனிப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் கருவியின் அடையாளம், சிம் கார்டின் அடையாளம் ஆகியவற்றைப் பின்னணியில்  சரிபார்த்துச் செயல்படுவதால் மிகப்பாதுகாப்பான பணிப் பரிமாற்ற முறையாகவும் இது விளங்குகிறது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் யுபிஐ செயல்முறையை பயன்படுத்துமாறு அமெரிக்காவுக்கே கூகுள் நிறுவனம் அறிவுரை வழங்கி யதும் குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் அந்நியப் பரிவர்த்தனைகளில் பாதியைக் கொண்டுள்ள நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகிய வற்றுக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 நவம்பரில் ஓர் இங்கிலாந்து நிறுவனத்தால் செய்யப்பட்டது. மற்றோர் இங்கிலாந்து நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள வணிகர்களுக்கு, நிகழ்நேர நாணய மாற்று வசதியுடன் யுபிஐ மூலம் பணம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 2022 ஜனவரியில் செய்தது. ஒரு மலேஷிய நிறுவனமும், அந்நாட்டுக்கு யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான ஒப்பந்தத்தை 2021இல் செய்தது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், பூட்டான், நேபாளம்  ஆகிய நாடுகளுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை 2023 பிப்ரவரியில் போன்பே அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதற்கும் இந்த வசதியை விரிவுபடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தமும்  நாடுகளின் தயக்கமும்

ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் பின்னணியில் தரும் அழுத்தத்தால் கனடா போன்ற பல நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. நாடுகடந்த அல்லது உள்நாட்டுச் சில்லரை வணிகம் எதுவானாலும்,  அவற்றிற்கான பணப்பரிவர்த்தனையில் விசா, மாஸ்டர்கார்டு, அமெ ரிக்கன் எக்ஸ்பிரஸ், பே-பால் ஆகிய நான்கு அமெரிக்க நிறுவனங்கள்தான் உலக அளவில் மிகப்பெரிய பங்கை நிர்வகிக்கின்றன.  2022 ஓராண்டிற்கான இவற்றின் மொத்த வருவாய் 129.75 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் 10.62 லட்சம் கோடி! அதனால்தான் இவற்றால் உலக நாடுகளையே யுபிஐ கட்டமைப்பை ஏற்பதிலிருந்து தடுக்க முடிகிறது. இவை அனைத்தும், எந்த இரு நாடுகளுக்கிடையேயான பணப் பரிமாற்றமாக இருந்தாலும், அதனை டாலரில் மாற்றித்தான் பின்னர் செலுத்தப்படும் நாட்டு நாணயத்துக்கு மாற்றுகின்றன என்பதால் இவை டாலரின் மேலாதிக்கத்துக்கு மறைமுக மாக உதவும் அமைப்புகளாகவும் இருக்கின்றன. அதனால் தான் இவற்றின் முயற்சிக்கு அமெரிக்க அரசும் மறை முகமாக உதவுகிறது. இந்தப் பின்னணியில்தான் ரிசர்வ் வங்கியின் அறி விப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள (கிரெடிட், டெபிட்) கார்டுகளில் 80 சதவீதத்தை விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ் பிரஸ் ஆகியவைதான் வழங்கியிருக்கின்றன. மீதமுள்ள 20 சதவீதம் ரூபே கார்டுகள். ரூபே மிகப் பெரும்பான்மை யாக டெபிட் கார்டாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் சில்லரை வணிகச் செலவில் டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதில் 75 சதவீதம் யுபிஐ மூலம் செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத்தான் யுபிஐ மூலம் செலவு செய்ய முடியும் என்ற நிலையில், கடன் அடிப்படை யில் செய்யப்படும் செலவுகளின் மிகப் பெரும்பான்மை யான அளவு அந்த மூன்று அமெரிக்க நிறுவனங்களின் வழியாகவே செய்யப்பட்டு, அதற்கான கட்டணங்களும் வருவாயாக அமெரிக்காவிற்குத்தான் செல்கின்றன. 

மற்றொரு மைல்கல்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கிரெடிட் லைன் - அதா வது கடன் வசதி என்பது, கிரெடிட் கார்டுக்கு மாற்றாகவும், யுபிஐ பரிவர்த்தனையின் எளிமையுடனும் கிடைக்கும். அத்துடன், வாடிக்கையாளரின் திரும்பச் செலுத்தும் வர லாற்றைப் பொறுத்து, நிகழ்நேரத்தில் இந்த கடன் எல்லை (லிமிட்) அதிகரிக்கப்படவோ, குறைக்கப்படவோ முடியும் என்பதால், வங்கி, வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்புக் குமே இது மிகப்பெரிய வசதியாக அமையும். எளிதாகக் கடன் கிடைக்கும் என்பதால் இது இந்திய சில்லரை வணி கத்தையும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து, பிரிக்ஸ் நாடுகள் தனி நாணயம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிற பாதையில், இந்த யுபிஐ கிரெடிட் லைன் என்பது மற்றொரு மிகப்பெரிய மைல் கல்லாகவே இருக்கும்! 

அறிவுக்கடல்