states

தமிழ்நாடு கல்விக் கொள்கை வகுக்கும் வல்லுனர் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரி செய்திடுக!

சென்னை, மே 16 - தமிழ்நாடு கல்விக் கொள்கை வகுக்கும்  வல்லுனர்குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடு களை சரி செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செவ்வாயன்று நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளார்.  அக்கடிதம் வருமாறு: ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை  புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இது மட்டுமின்றி பாடப்புத்தகங்களை மாற்றி யமைப்பது, சுதந்திரப்போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படை யில் மாற்றி மாணவர்களுக்கு கற்பிப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நல்வாய்ப்பு சிதைக்கப்படுமோ? ஒன்றிய அரசின் இத்தகைய தவறான நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில்  தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமை களுக்கேற்ப மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட குழு  அமைத்தது. தமிழ்நாடு அரசின் இந்த நட வடிக்கை அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் இம்மகத்தான முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும் வகையில் மாநில கல்விக் கொள்கை உரு வாக்கும் குழுவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் உயர்ந்த நோக்கம் சிதைக்கப்படுமோ என்கிற ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளது.

தேவையானால் சீரமைத்திடுக!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு கல்விக் கொள்கைக் குழுவினருக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைச் சரிசெய்து, ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றான விஞ்ஞான அடிப்படையிலான மாநில கல்விக்கொள்கையை உருவாக்கிட கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், இப்பணியை செழுமைப்படுத்திட தேவையானால், அமைக்கப்பட்டுள்ள கல்விக்கொள்கைக்கான வல்லுனர் குழுவை  மறுசீரமைக்கவும் அரசு ஆலோசிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.