states

img

இரும்புக்கடைக்குச் செல்லும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

போபால், அக்.23- இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசு  உயர்த்திக்கொள்ளும். அதேவேளையில், கேஸ் மானியத்தை  வங்கியில் போடுவதாகச் சொன்னது மோடி அரசு. இப்போது பட்டை நாமத்தை போட்டுவிட்டது.  இந்த நிலையில்  விலை உயர்வால் கேஸ் நிரப்பபட்ட சிலிண்டரை வாங்க முடியாத மக்கள் காலி சிலிண்டர்களை இரும்புக் கடையில் விற்றுவருகின்றனர். மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங் களுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பழைய இரும்புக் கடையில் மொத்தமாக விற்பனைக்கு வந்துள்ளன. மத்தியப்பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் உடைப்பதற்காக ஏராளமான காலி சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த சிலிண்டர்களி்ல் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்டது என  எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிய சிலிண்டர்கள் எவ்வாறு இரும்புக் கடைக்கு வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத், “இரும்புக் கடையில் சிலிண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிந்த் மாவட்ட வழங்கல் அதிகாரி அவ்தேஷ்  பாண்டே கூறுகையில், இரும்புக் கடையில் காலி சிலிண்டர்கள் விற்பனைக்கு வந்தது எனக்குத் தெரியாது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு விலையில்லா சிலிண்டர், அடுப்பு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். ஆனால் நாங்கள் சிலிண்டரை இலவசமாக நிரப்பமாட்டோம்” என்றார். மத்தியப் பிரதேச அரசின் புள்ளிவிவரங்களின்படி, பிந்த் மாவட்டத்தில் 2.76 லட்சம் குடும்பங்கள் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ .983 விலையில் உள்ளது.  இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜபல்பூரில் உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;