லக்னோ, மே 16 - உத்தரப் பிரதேச மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, ஊரக மற்றும் சிறு நகரங்களில் அடிவாங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை, அயோத்தி, ஜான்சி, பரேலி, மதுரா பிருந்தாவன், பிரயாக்ராஜ், அலிகார் உள்பட 17 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியது. அதேபோல, 198 நகராட்சித் தலைவர் மற்றும் 5 ஆயிரத்து 260 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 542 பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 104 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக-வால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் குறிப்பாக, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மீரட், காஜியாபாத் மற்றும் ஷஹரான்பூர் டிவிஷன்களில் பாஜக மண்ணைக் கவ்வியிருப்பது தெரியவந்துள்ளது. மீரட். சஹரான்பூர் டிவிஷனில் மேயர் தேர்தலை தவிர்த்து பாஜக-வின் மேஜிக் எங்கும் எடுபடவில்லை. இந்த டிவிஷனில், மொத்தமுள்ள 90 நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளில் 64 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் வெறும் 26 இடங்களில் மட்டுமே வென்றுள்ளனர். பக்பத், முசாபர்நகர் மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் இந்த மாவட்டங்களில் பாஜக-விற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.