கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (79) இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார். இவர் கடந்த 2004-06 மற்றும் 2011-16 ஆகிய இருமுறை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில், தொடர்ந்து 12 முறை வென்று 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது: "உம்மன் சாண்டியின் மறைவுடன், கேரள அரசியலில் ஒரு வரலாற்று அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஒரு ஆட்சியாளராகவும், அரசியல் தலைவராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் நமது மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் சிறப்பானது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.