states

img

சட்டவிரோதமாக வீடுகளை இடித்த உத்திரப்பிரதேச பாஜக அரசு: அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கண்டனம்!

நோட்டீஸ் வழங்காமல் ஒருவரின் வீட்டை இடித்தது கடும் கண்டனத்திற்குரியது. வீட்டை பறிகொடுத்தவருக்கு உத்தரப் பிரதேச பாஜக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனோஜ் டிப்ரெவல் என்கிற மனுதாரர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தங்களது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும், சிறு சிறு தவறுகளுக்காக கைதானவர்களின் வீடுகளை இடித்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பொதுத்துறைக்கு சொந்தமான 3.7 சதுர மீட்டர் நிலத்தில் வீடுகட்டியதாக, மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் மனோஜ் டிப்ரெவல் ஆகாஷ் என்பவரின் வீட்டை எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இடித்து தரைமட்டமாக்கியது உத்தரப் பிரதேச பாஜக அரசு.

இதனைக் கண்டித்து, 2020 ஆம் ஆண்டு மனோஜ் அளித்த புகாரின் பேரில், விசாரணை செய்ய ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம். இச்சூழலில், கடந்த 4 ஆண்டுகளாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாநில அரசிற்கு சொந்தமான 3.7 சதுர மீட்டர் நிலம் என்பது மீட்புக்குரிய பகுதி தான். ஆனால், முன் அறிவிப்பு ஏதுமின்றி, வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது சட்டத்திற்கு எதிரானது. இது போன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

மேலும், இதற்கு அபராதமாக ரூ.25 லட்சம் இழப்பீடு தொகையை மனுதாரர் மனோஜிற்கு உத்தரப் பிரதேச பாஜக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் விவரமும், விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம், உத்திரப் பிரதேச தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.