போபால்
நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகம், தில்லி, மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் இரண்டாம் கட்ட அலையில் சிக்கியுள்ளன. இதில் மகாராஷ்டிரா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தின் முக்கிய நகரான போபால் மற்றும் இந்தூரில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், பொழுதுபோக்கு மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.